தாயின் கடைசி வார்த்தைகளை மறைத்து வைத்திருந்த பொம்மை திருட்டுப்போன சம்பவம்: ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in கனடா

வான்கூவரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் தாயார் புற்றுநோயால் இறந்துபோக, அவர் பேசிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து பொம்மை ஒன்றிற்குள் வைத்திருந்தார் அவர்.

Mara Soriano (28) என்ற அந்த இளம்பெண்ணின் தாய் Marilyn (53) புற்றுநோயால் அவதியுற்று வந்தார்.

தன் கடைசி நாட்களில், மகளிடம், நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை மகளாக அடைந்தது நான் செய்த பாக்கியம், நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் என்று Marilyn கூற, அந்த வார்த்தைகளை பதிவு செய்து வைத்திருந்தார் Mara.

பின்னர் தாயின் புற்றுநோய் முற்ற, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அவரால் சரியாக பேசமுடியவில்லையாம்.

ஆக, அவர் நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறிய வார்த்தைகளை பதிவுசெய்திருந்த கருவியை டெடி பியர் ஒன்றினுள் பதித்து வைத்து, அதை மாமா (அம்மா) பியர் என்றே அழைத்து வந்திருக்கிறார் Mara.

ஆனால், நான்கு நாட்களுக்கு முன் வீடு மாற்றும்போது Mara அந்த பொம்மை இருந்த முதுகுப்பையை மறந்து வீட்டுக்கு வெளியேயே வைத்துவிட்டார்.

அதை ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியிருந்தன. தாயின் கடைசி வார்த்தைகள் அடங்கிய பொம்மையை தவற விட்ட Mara குறித்த தகவலை ஊடகவியலாலர் ஒருவர் வெளியிட, அவருக்கு ஆதரவு பெருகியது.

பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறியதோடு, வான்கூவரைச் சேர்ந்த பிரபல நடிகரான Ryan Reynolds, பொம்மையை திருப்பி கொடுப்பவரிடம் எந்த கேள்வியும்

கேட்கப்படாமல் 5,000 டொலர்கள் பரிசளிக்கப்படும் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொம்மை காணாமல் போய் நான்கு நாட்களுக்குப் பிறகு, பூங்கா ஒன்றில் அதை கண்டெடுத்த ஒருவர் Maraவிடம் ஒப்படைத்துள்ளார்.

அவருக்கு சிறு தொகை ஒன்றை பரிசாக அளித்துள்ள Mara, அவருக்கு வாக்களிக்கப்பட்ட தொகை விரைவில் வந்து சேரும் என்று அவரிடம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மாமா பியர் வீட்டுக்கு வந்து விட்டார் என்று மகிழ்ச்சி பொங்க கூறும் Mara, பொம்மையின் உள்ளங்கையை அழுத்த, அதிலிருந்து, நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை மகளாக அடைந்தது நான் செய்த பாக்கியம், நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன், என்ற தாயின் குரல் ஒலிக்க, கண்ணீர் மல்க அதை இறுக அணைத்துக்கொள்கிறார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்