கனடாவில் 19 மாத பெண் குழந்தை முகக்கவசம் அணியாததால் ரத்தான விமான சேவை

Report Print Santhan in கனடா

கனடாவில் 19 மாத பெண் குழந்தை முக கவசம் அணியாத காரணத்தால் விமான சேவை ரத்தான சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கனடாவில் கல்கரி நகரத்தில் இருந்து டொராண்டோ நகருக்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வெஸ்ட்ஜெட் விமானம் புறப்பட தயாரானது.

அந்த விமானத்தில் சப்வான் சவுத்ரி என்ற பயணி தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் ஏறி இருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கு காரணம் சவுத்ரியின் இளைய 19 மாத குழந்தை முகக்கவசம் அணியவில்லை. இதனால் குழந்தைக்கு முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று விமான நிறுவனம் கட்டாயப்படுத்தியுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன் தனது 3 வயது மகள் முக கவசம் அணியாமல், தின்பண்டம் சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், குழந்தை சாப்பிட்டு முடிப்பதை கூட சகித்துக்கொள்ளாமல் விமான ஊழியர்கள், குழந்தை முக கவசம் அணியாவிட்டால், விமானத்தின் கதவுகளை மூட முடியாது என மறுத்து விட்டதாக சவுத்ரி கூறினார்.

அதைத் தொடர்ந்து சவுத்ரியும் குழந்தைக்கு முக கவசம் அணிவிக்க சம்மதித்தார். அவரது 3 வயது மகள் முக கவசம் அணிந்த நிலையில், 19 மாத குழந்தைதான் அணியாததால், ஆத்திரம் அடைந்த விமான ஊழியர்கள், அந்த குடும்பத்தினரை விமானத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர்.

அப்படி அவர்கள் வெளியேறாவிட்டால் கைது, வழக்கு, தண்டனை என நடவடிக்கை நீளும் என எச்சரித்ததுடன், பொலிசாரையும் வரவழைத்தனர்.

அதைத் தொடர்ந்து தாங்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறி சவுத்ரி குடும்பத்தினர் வெளியேற, அதன் பின் விமானி விமானத்தை இயக்கும் மன நிலையில் இல்லை என கூறி விட்டனர்.

இதற்கிடையே பொலிசார் வந்து விமானத்திற்குள் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேறியதால், விமான சேவையும் ரத்தானது.

இருப்பினும் கனடாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதியின்படி 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிந்தால் போதும் என தெரிய வந்துள்ளதாக சவுத்ரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்