சுற்றுலா சென்று திரும்பிய கனேடிய குடும்பம்: குழந்தைகளின் படுக்கையறையில் கண்ட திடுக்கிடவைத்த காட்சி!

Report Print Balamanuvelan in கனடா

அந்த கனேடிய குடும்பம் சுற்றுலா சென்றதென்னவோ உண்மைதான், ஆனால் கொஞ்சம் நீண்ட நாட்களுக்கு வீட்டைவிட்டு சென்றுவிட்டதால் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

Allison Greenway குடும்பத்தினர் மூன்று வாரங்கள் உறவினர்களுடன் செலவிட்டுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அப்போது வீடு பூட்டப்படாமல் இருப்பதைக் கண்டு குழப்பமடைந்து வீட்டுக்குள் போய்ப் பார்த்தால், வீட்டின் ஜன்னல்கள் அனைத்திலும் போர்வைகளைப் போட்டு, உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருப்பதற்காக யாரோ மறைத்திருப்பது தெரியவந்துள்ளது.

குப்பையும் கூளமுமாக, வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லாமல், நகைகள் முதலான விலையுயர்ந்த பொருட்கள் காணாமல்போய் வீடே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடந்துள்ளது.

அதிலும் தங்கள் குழந்தைகளின் படுக்கையை யாரோ பயன்படுத்தியது தெரியவந்தது Allisonஐ அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உறவினர்களை வரவழைத்து வீட்டை ஒழுங்குபடுத்தி, சுத்தம் செய்வதிலேயே நாளெல்லாம் போய்விட, அப்படியும் பயம் மிச்சமிருக்க, சரி, தற்காலிகமாக ஹொட்டல் ஒன்றில் தங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது குடும்பம்.

இரவு 8 மணி வாக்கில் வீட்டை ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்து விடலாம் என புறப்பட்டுள்ளார் Allison Greenwayயின் கணவர்.

வீட்டுக்கு வந்த Greenwayயின் கணவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்துள்ளது,ஆம், யாரோ ஒருவர் வீட்டுக்குள் நடமாடுவதைக் கண்டுள்ளார் அவர்.

நாளெல்லாம் செலவிட்டு வீட்டை சுத்தம் செய்த பிறகும், அதாவது வீட்டு உரிமையாளர் திரும்பிவிட்டார் என்று தெரிந்த நிலையிலும், யாரோ மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளதை அறிந்த Greenwayயின் கணவர் உடனே பொலிசாரை அழைத்துள்ளார்.

மோப்ப நாயுடன் வந்த பொலிசார், குளியலறையில் மின்விளக்கு எரிவதையும் யாரோ ஒருவர் வீட்டுக்குள் நடமாடுவதையும் கண்டு, கதவைத் தட்டியிருக்கிறார்கள்.

பதில் ஏதும் இல்லாததால், வேறு வழியின்றி வீட்டுக்குள் நுழைந்த பொலிசார், குழந்தைகளின் துணிமணிகளை வைக்கும் அலமாரிக்குள் (closet) ஒரு ஆள் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

பொலிஸ் நாயிடம் சில கடிகள் வாங்கியபின் கைது செய்யப்பட்டுள்ளார் அந்த நபர். அந்த நபர் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என பொலிசாரால் அறியப்பட்ட, Sean Kulai (40) என்ற நபர் என்பது தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 15ஆம் திகதி, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

இதற்கிடையில் CCTV கமெரா ஒன்றைப் பொருத்துவதற்காகவும், களவு போன மற்றும் நாசமாக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்காகவும் பணம் சேகரிக்கும் முயற்சியில் Allisonஇன் குடும்ப நண்பர்கள் இறங்கியுள்ளார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்