வெளிநாட்டில் திருடிய பொருட்களால் பல ஆண்டுகள் துரதிர்ஷ்டம்: திருப்பிக்கொடுத்த கனேடிய இளம்பெண்

Report Print Balamanuvelan in கனடா

ரொரன்றோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றபோது, பிரபல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்றிலிருந்து சில பொருட்களை திருடிக்கொண்டு வந்துள்ளார்.

Nicole என்னும் அந்த பெண் 2005ஆம் ஆண்டு, அவருக்கு 21 வயது இருக்கும்போது, பிரபல சுற்றுலாத்தலமான Pompeii என்ற இடத்துக்கு சென்றுள்ளார்.

ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய Pompeii நகரம், பின்னர் கி.பி 79இல் எரிமலை ஒன்று வெடித்தபோது எரிமலைக் குழம்பில் சிக்கி அழிந்துபோனது. சாம்பலில் மறைந்திருந்த அந்த நகரத்தை, 16 ஆம் நூற்றாண்டு புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பின், அது பிரபலமான சுற்றுலாத்தலமாயிற்று.

அந்த நகரத்துக்கு சென்ற Nicole, இரண்டு மொசைக் டைல்ஸ், இரண்டு ஜாடிகள் மற்றும் Pompeii நகர சுவரில் ஒரு துண்டு ஆகியவற்றை தன்னுடன் கொண்டு வந்துள்ளார்.

பின்னர் Nicoleக்கு புற்றுநோய் தாக்கிய நிலையில், அவரது இரண்டு மார்பகங்களும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டன. அத்துடன், அவரது குடும்பமும் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கர நிதிப் பிரச்சினையால் அவதியுற்றுவந்துள்ளது.

தற்போது 36 வயதாகும் Nicole, வரலாற்றின் ஒரு பகுதியை தன்னுடன் கொண்டு வருவதாக எண்ணி, இளம் வயதாக இருந்ததால் அறிவற்று அந்த செயலை செய்துவிட்டதாக தெரிவிக்கிறார்.

எரிமலைக் குழம்பில் சிக்கி ஏராளமானோர் அழிந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜி கொண்ட அந்த இடத்திலிருந்து திருடி வந்த அந்த பொருட்கள்தான் தன் வாழ்வின் இத்தனை துயரங்களுக்கும் காரணம் என்று எண்ணும் Nicole, அந்த பொருட்களை ஒரு பார்சலில் போட்டு Pompeii நகரத்திற்கே அனுப்பிவிட்டார்.

இந்த சாபம் எனது குழந்தைகளுக்கோ, குடும்பத்தினருக்கோ கடத்தப்படவேண்டாம் என்று கூறும் Nicole, தான் அனுப்பிய பொருட்களுடன் ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்