கனடா மாகாண மக்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு எச்சரிக்கை கடிதம்: மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ராணுவம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் சிலருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அதில், எட்டு சாம்பல் ஓநாய்கள் வடக்கு நோவா ஸ்கோஷியாவுக்குள் விடப்படுவதாகவும், யாராவது ஓநாய்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அமைதியாக பின்வாங்கவேண்டும் என்றும், திரும்பி ஓடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் நிலம் மற்றும் வனத்துறை வெளியிட்ட ஒரு ட்வீட்டில், அது ஒரு போலி செய்தி என்றும், யார் அதை வெளியிட்டது என்பது தெரியவில்லை என்றும், அரசு, ஓநாய்கள் எதையும் காட்டுக்குள் விடவில்லை என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், அது இராணுவ பயிற்சிக்காக வெளியிடப்பட்ட ஒரு செய்தி என்று தெரிவித்துள்ள ராணுவம், பொதுமக்களுக்கும் வனத்துறைக்கும் தங்களால் ஏற்பட்ட தொந்தரவுக்கு வருந்துவதாக தெரிவித்துக்கொண்டதோடு, மன்னிப்பும் கேட்டுகொண்டுள்ளது.

ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ராணுவ பயிற்சிக்கு எதற்காக இப்படி ஒரு போலி கடிதம் தேவை என்பது தனக்குப் புரியவில்லை என்றும், அது எப்படி பொதுமக்களின் தபால் பெட்டிகளை வந்தடைந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.

அது தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உண்மை தெரியவரும்போது விளக்கமளிப்பதாக தெரிவித்தார்.

Provided by The Canadian Press

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்