கனடா எல்லையில் கொலைகாரக் குளவிகளின் கூடு ஒன்றைக் கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக அதை அழித்தனர்.
ஒரு கால் பந்து அளவுக்கு இருந்த அந்த குளவிக்கூட்டில் 100 குளவிகளுக்கு மேல் இருந்த நிலையில், சினிமாவில் வருவதுபோல் கவச உடை அணிந்து அந்த குளவிக்கூட்டை அதிகாரிகளும் ஆய்வாளர்களும் அழித்தனர்.
இந்த குளவிகள் ஏன் கொலைகாரக் குளவிகள் என்று அழைக்கப்படுகின்றன என்றால், ஒரு சிறு கூட்டம் குளவிகள் ஒரு பெரிய தேன் கூட்டுக்குள் நுழைந்து அதிலிருக்கும் மொத்த தேனீக்களின் தலைகளையும் துண்டித்துக் கொன்றுவிடும் (சில மணி நேரத்திற்குள்).
இப்போதைய சூழலில் பலருக்கும் தேனீக்களின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும்... தேனீக்கள் தாவரங்களின் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.
அவை பூக்களில் சென்று தேன் எடுக்கும்போது அவற்றின் கால்களில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம், அதே தேனீ மூலம் இன்னொரு பூவில் சென்று சேர்வதால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
மகரந்தச்சேர்க்கை இல்லயென்றால், பூ காயாகாது, காய் கனியாகாது, கனியிலுள்ள விதைகள் அடுத்த தலைமுறை செடிகளைத் தர இயலாது.
ஆக, தேனீக்கள் இல்லையென்றால் தாவர இனமே அழிந்துவிடும் அபாயம் உண்டு. ஆகவேதான் ஆய்வாளர்கள் இந்த கொலைகாரக் குளவிக்கூடுகளை அழிக்கிறார்கள்.
எனவே, குளவிகளைக் கண்டால் அவற்றைக் கொல்லவேண்டாம், உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுங்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.
காரணம் என்னவென்றால், குளவிகளைக் கொல்வதைவிட, அவற்றை ட்ரேஸ் செய்து, அவற்றின் கூடு எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்தால், அவற்றின் கூட்டையே மொத்தமாக அழித்துவிடமுடியும். அதாவது நம் பங்கிற்கு தாவரங்கள் அழியாமல் காப்பாற்ற முடியும்!
