உயிருக்கு போராடும் தனது உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக கனேடியர் ஒருவர் பிரித்தானியாவுக்கு சென்ற நிலையில், புதிய கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் அவரை கனடாவுக்கு மீண்டும் கொண்டு வர போராடி வருகிறார் அவரது மகள்.
ஒன்ராறியோவின் Oakvilleயில் வாழும் Jim (66), மரணத்தருவாயில் இருக்கும் தன் உறவினர் ஒருவரைக் காண்பதற்காக பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார்.
அவர் மீண்டும் கனடா திரும்ப விமான நிலையம் வந்தபோதுதான் பிரித்தானியாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்ட விடயம் அவருக்கு தெரியவந்தது.
தனது தந்தை பிரித்தானியாவில் சிக்கிக்கொள்ள, மகளான Sarah O'Carroll (30), தந்தையை எப்படி திரும்ப கனடா அழைத்து வருவது என்பது தெரியாமல் தவித்துப்போயிருக்கிறார்.

Jimக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினை வேறு உள்ளதால் அவரது மகள் கலங்கிப்போயிருக்கிறார்.
இதற்கிடையில், பிரித்தானியாவில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த Jimக்கு புதிதாக மற்றொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆம், நேற்றுடன் அவர் அந்த அறையில் தங்க கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், இப்போதைக்கு கனேடிய குடிமக்களை திரும்ப அழைத்துவரும் திட்டம் எதுவும் கனடாவுக்கு இல்லை என்பதால், ஆளுக்கொரு நாட்டில் தந்தையும் மகளும் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியிருக்கிறார்கள்.