பிப்ரவரி 22 முதல் கனடாவுக்கு வரும் பயணிகள், கொரோனா சோதனை செய்யப்பட்டு, அதன் முடிவு கிடைக்கும் வரை சொந்த செலவில் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆபத்தான கொரோனா வைரஸ்களிடமிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில், அத்தியாவசியமற்ற விமானப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற விமானப் பயணிகள் கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் மூன்று இரவு தங்குவதற்கு தங்கள் சொந்த செலவில் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை அரசாங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தரைவழியாக அமெரிக்க எல்லையைத் தாண்டியவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஆனால், வருவதற்கு மூன்று நாட்களுக்குள் எதிர்மறையாக சோதிக்கப்பட்டதற்கான ஆவணத்தை காட்ட வேண்டும். இருப்பினும் 14 நாட்கள் வீட்டிலோ அல்லது வேறு இடங்களிலோ சுய தனிமைப்படுத்தில் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பயண விதிமுறைகள் வரும் பிப்ரவரி 22-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்களாக இருப்பினும் அவர்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.