சுயதொழில் கடன்திட்ட பயனாளிகளின் உற்பத்திபொருள் கண்காட்சி

Report Print Sumi in சமூகம்

யாழ். சங்கிலியன் பூங்கா வளாகத்தில், புனர்வாழ்வு அதிகாரசபையின் சுயதொழில் கடன்திட்ட பயனாளிகளின் உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்தும் மாபெரும் மலிவு விற்பனை கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சம்பிரதாய பூர்வமாக குறித்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகாரசபையின் சுயதொழில் ஊக்குவிப்பு கடன் திட்டத்தில் கடனுதவிகளை பெற்ற பயனாளிகள் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீளிணைக்கப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கு தகுந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இக்கண்காட்சி இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்டம் முழுவதிலுமுள்ள சுமார் எண்பதிற்கும் மேற்பட்ட பயனாளிகள் பனைசார் உற்பத்திப்பொருட்கள், தும்பு உற்பத்திகள், சிறு அலங்கார உற்பத்திகள் மற்றும் விவசாய உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கான நிதியுதவி மற்றும் முப்பது சுயதொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான நிதியுதவி ஆகியவற்றினையும் அமைச்சர் வழங்கி வைத்துள்ளார்.

புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவலல்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பொன்னையா சுரேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண எதிர் கட்சி தலைவர் சி.தவராஜா யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்