அசாதாரண காலநிலையால் மக்கள் பெரும் பாதிப்பு

Report Print Rusath in சமூகம்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் திடீரென வீசிய சூறைக்காற்று, மழை, இடி மின்னலால் பகுதியளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அசாதாரண காலநிலையால் களுவாஞ்சிக்குடியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பெரியபுல்லுமலை உள்ளிட்ட இன்னும் சில இடங்களில் வீசிய சூறைக் காற்றின் காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் மற்றும் பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல் தொடர்பில் ஆராய்ந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளும் உலர் உணவுகளும் வழங்கப்பட்டன.

காற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்ததுடன், காற்றின் வேகம் தணிந்த பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, கல்லாறு, கோட்டைக்கல்லாறு போன்ற பிரதேசங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்திலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிவோரியன் வீட்டுத்திட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரியப்பர் வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் கூரைகள் காற்றில் அடித்துச்சொல்லப்பட்டிருந்ததுடன், சுமார் 65 வீடுகளின் கூரைகள் முழுமையாகவும் சில பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காரியப்பர் வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கல்முனையில் வீசிய சூறைக் காற்றினால் வீடுகள், குடிசைகள், சேதமடைந்ததோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப்படகுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடலுக்குள் தள்ளப்பட்டன.

மேலும், கடலினுள் இழுத்துச் செல்லப்பட்ட படகுகளை மீனவர்கள் மீண்டும் இழுத்துக் கரைசேர்த்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...