மாற்றியமைக்கப்படும் மலையக மக்களின் இரண்டு தசாப்த கால அடையாளம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலையக பெருந்தோட்ட பகுதிகளின் லயன் குடியிருப்புகளில் இரண்டு தசாப்த காலமாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடையாளத்தை மாற்றும் முகமாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் தனி வீடுகளை கட்டியமைத்து கொடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்ட பகுதிகளில் இந்திய வீடமைப்பு திட்டம் என்ற பெயரில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் தனி வீடுகள் பல கட்டியமைக்கப்பட்டு வருகின்றன.

தோட்டங்கள், கிராமங்களாக்கப்பட வேண்டும் என்ற இலக்கினை உச்சியாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த தனி வீட்டு கிராமங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் நுவரெலியா - பூண்டுலோயா, டன்சினன் தோட்ட பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்தினால் முதல் கட்டமாக 400 வீடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ள நிலையில், டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகள் கட்டியமைத்து அதற்கான மின்சார, குடிநீர் விநியோக வேலைப்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

சமயலறை, 2 படுக்கையறைகள், குளியலறை, மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் டயகம மேற்கு தோட்டத்தில் அங்கு வசிக்கின்ற தொழிலாளர்கள் லயன் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் அற்றவர்களாக ஏனைய தோட்டப்பகுதிகளை விட மிக மோசமான நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனை கண்ணுற்ற அமைச்சு மற்றும் இந்திய அரசாங்கம் இத்தோட்டத்தில் உடனடியாக தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கையை எடுத்திருந்தது.

இதற்கமைவாக சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 150 வீடுகளை பயனாளிகளுக்கு விரைவில் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் 21ஆம் திகதி பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் வீடுகள் பயனாளிகளுக்கு வைபவ ரீதியாக கையளிப்பதற்கு குறித்த அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த நிகழ்வில் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு வீடுகளை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வீடுகளின் திறப்பு விழாவின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியை நேரடியாக காணொளி மூலம் ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்