தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட கடிதம் ஆளுநரினால் கையளிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், அதற்கான கடிதத்தினை உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தினை நேற்று அம்பாறை ஆளுநர் பணிமனையில் வைத்து பாடசாலையின் அதிபர், பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர், அரசியல் தலைவர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

இதன்போது மேற்படி பாடசாலையினுடைய எதிர்கால வளர்ச்சிக்கு தன்னாலான ஒத்துழைப்பையும்,முயற்சியையும் வழங்குவதாக ஆளுநர் உறுதி மொழி வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உப வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான மஜீட், அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த பல்வேறு வகையிலும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையிலேயே அண்மையில் நியமிக்கப்பட்டு இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்திற்கு இவ் வேண்டுகோளை அப் பிரதேசத்தை சேர்ந்த கல்வி மான்களும், பாடசாலை சமூகமும், உள்ளூர் அரசியல் தலமைகளும் முன்வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மேற்படி பாடசாலையினை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு ஆளுநரின் அனுமதியையடுத்து, கல்வி அமைச்சு குறித்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers