சீயோன் தேவாலய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த மக்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியானோரை நினைவுகூரும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

'உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்களுக்காக' என்னும் தலைப்பில் அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் உறுப்பினர்களினால் சிறப்பான முறையில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் ,மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், குண்டுத் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொன் உட்பட இந்து, பௌத்த,கிறிஸ்தவ மதத் தலைவர்கள், இளைஞர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுப் பேருரைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிர்நீத்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

இதேவேளை, கடந்த 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்ட உறவுகளின் 08ம் நினைவையொட்டி மட்டக்களப்பில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.அருமைத்துரை தலைமையில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 03ம் குறுக்குத் தெரு வீதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் உதவிப் போதகர் றொபட் டினேஸ், சனசமூக நிலைய உறுப்பினர்கள், புளியந்தீவு ரிதம் இளைஞர் கழக உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிரிழந்த உறவுகளுக்காக பிரதேச பொது மக்களினால் இந்து, கிறிஸ்தவ ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உதவிப் போதகரினால் விசேட செப வழிபாடும் மேற்கொள்ளப்பட்டு வருகை தந்த அனைவரினாலும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்