வவுனியாவில் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு: பொதுமக்கள் விசனம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வவுனியாவில் மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினரால் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - வைரவபுளியங்குளம், சிறுவர் பூங்காவில் எதிர்வரும் 10திகதி முதல் 14ஆம் திகதி வரை இராணுவத்தினரால் கலை, கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த நிகழ்வுகள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ் விடயம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் மைதானத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணைப்பரீட்சைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் மக்கள் குடிமனைகள் உள்ள இடத்தில் இவ்வாறான நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

9ஆம் ஆண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தவணைப்பரீட்சைகள் மாகாண மட்டத்திலான பரீட்சையாக இருக்கும் நிலையில் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதானது எமது மாவட்ட மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கு வழிசமைக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது

அத்துடன் ஒலிபெருக்கிகளில் சத்தம் அதிகரிக்கும் போது மாணவர்களுக்கு கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்படும் என்பதுடன் அடுத்த மாதம் உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் போது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதுடன் நகரசபையும் இதற்கான அனுமதி வழங்கும் போது மக்களின் நலனிலும் அக்கறை கொள்ளவேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டமை தொடர்பாக வவுனியா நகரசபை தலைவரிடம் வினவியபோது,

இது ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு. இதுவரை எந்தவிதமான எதிர்ப்பும் எமக்கு கிடைக்கவில்லை. அப்பகுதி மக்களும் இந்நிகழ்வுக்கு அனுமதி அளித்தமைக்கான கடிதங்கள் எமக்கு காட்டப்பட்டதன் பின்னரே நிகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன் பல நாட்களாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டதன் பின்னர் தற்போது அனைத்து ஒழுங்கமைப்பினையும் ஏற்பாட்டாளர் செய்த பின்னர் நிறுத்துமாறு தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக என்னுடன் தொடர்புகொள்ளமுடியும் என வவுனியா நகரசபை தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்