வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட வெலிக்கடைப் படுகொலையின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தம் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உபதவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசபைத் தவிசாளர் யோகநாதன், போரதீவுப் பற்றுப் பிரதேசபைத் தவிசாளர் ரஜனி உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் குட்டிமணி, தளபதி தங்கதுரை ஆகியோரின் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1983ம் ஆண்டு ஜுலை 25 தொடக்கம் 27ம் திகதி காலப்பகுதிகளில் இடம்பெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலை கலவரத்தின் போது குட்டிமணி தங்கதுரை உட்பட போராளிகள், பொதுமக்கள் என 53 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அத்தினத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தினால் தமிழ்த் தேசிய வீரர்கள் தினமாக வருடாவருடம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

வெலிக்கடை சிறைச்சாலையில் கொடூரமாக கொல்லப்பட்ட விடுதலை போரட்டத்தின் ஆரம்பத் தலைவர்களான தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, போராளிகளான ஜெகன், தேவன் நடேசுதாசன் ,குமார் ,சிவபாதம் சிறீக்குமார் ,மரியாம்பிள்ளை, குமார குலசிங்கம், உற்பட 53 அரசியல் கைதிகளின் 36ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் படங்களுக்கு மாலை அனுவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழ் மக்களுக்காய் இன்னுயிர் ஈந்த தியாகிகளின் தியாகத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டிகளும் பொது இடங்களில் மக்கள் நினைவுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்