மனித மலம் அள்ள வைத்தார், மாட்டிக்கொண்டார்! -மதுரைப் பெண்ணின் அதிரடி செயல்

Report Print Thayalan Thayalan in சமூகம்

மதுரையில் 24 வயது இளைஞர் ஒருவரை, வீட்டின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வைத்த தொழிலதிபர் ஒருவரை, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் திவ்யா எனும் இளம் பெண் துணிச்சலாக மாநகராட்சி அதிகாரியிடம் பிடித்துக்கொடுத்த சம்பவம் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

மனிதனே மனித மலம் அள்ளுவது சட்டப்படிக்குற்றம், மேலும் உயிருக்கே ஆபத்தான செயலும் கூட.

மதுரை சிம்மக்கல்லில் சரோஜினி எண்டர்பிரைசஸ் எனும் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் உரிமையாளர், தனது நிறுவனத்தின் மாடியிலேயே வசித்து வருகிறார்.

நிறுவனத்தில் இருந்த செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய கந்தசாமி எனும் 24 வயது இளைஞரை நிறுவனத்தின் உரிமையாளர் அழைத்து வந்தார்.

அவரை செப்டிக் டேங்குக்குள் இறக்கிவிட்டு சுத்தம்செய்யப் பணித்துள்ளார். எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் செப்டிக் டேங்குக்குள் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் சம்பவங்கள் குறித்து ஆவணப்படங்கள் எடுத்து வரும் திவ்யாவுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைப் பார்த்து கொதித்த திவ்யா மதுரை மாநகராட்சி ஆய்வாளருடன் சம்பவ இடத்துக்குச் சென்று தொழிலதிபரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர் அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

2013-ல் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தின்படி மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் துப்புரவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மனிதர்களை மலம் அள்ள வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் இருந்துவரும் நிலையில் அவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் உலர் கழிப்பறைகள் கட்டுமானத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் செயற்பாட்டாளர் பெசவாடா வில்சன் அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டுள்ள எந்தச் சட்டமும் நடைமுறையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வாதாரத்திற்காக அவர்கள் மிகக் குறைந்த அளவிற்கான சம்பளத்திற்குக் கூட இப்படி மனிதக் கழிவுகளிடையே இறங்கி சுத்தம் செய்ய முன்வருகின்றனர் என்றார். செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடைத் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு விஷவாயு தாக்கி மக்கள் இறப்பது இன்றளவும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இதுகுறித்துப் பேசிய ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதி, "தமிழகத்தில் மனிதனே மனிதனின் மலத்தை அள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக சென்னை, மதுரை போன்ற மாநகரப்பகுதிகளில் மழைபெய்தால் நீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க, மக்கள் மனிதர்களைக் கொண்டு தங்கள் வீட்டு செப்டிக் டேங்குகளை தூர்வாரச் செய்யும் அவலம் அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன.

அதுவும் அருந்ததியினர் சமூக மக்கள் மட்டுமே இந்தத் தொழிலைச் செய்ய முன்வருவதால் அவர்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் அவலமும் காலம் காலமாக நடந்தேறி வருகின்றன.எவ்வளவு கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த செயலைச் செய்ய முன்வருவதில்லை. சில இடங்களில் அரசு அதிகாரிகளே கூட இந்த விஷயம் தொடர்பாக பாராமுகம் காட்டுகின்றனர்” என்றார்.

மனிதனே சகமனித மலத்தை அள்ளுவது ஆண்டாண்டு காலமாய் தொடர்கிறது, வல்லரசுக் கனவும். எதற்கான தீர்வை முதலில் எட்டப்போகிறோம்? -ஐஷ்வர்யா

- Vikatan

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments