ஐக்கிய நாடுகள் சபையில் வீழ்நிலை மனவோட்ட நாள் நிகழ்ச்சி சிறப்புரை

Report Print Dias Dias in சமூகம்

சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (21.03.2019) நடைபெற்ற வீழ்நிலை மனவோட்ட நாள் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்கள்.

குறித்த உரையில்,

மாண்புமிகு சான்றோர்களே, சர்வதேச ஒருங்கினைப்பின் மதிப்பிற்குரியவர்களே! வீழ்நிலை மனவோட்டம் இயக்கத்தின் உறுப்பினர்களே! எனதருமை பாரதநாட்டுக் குடிமக்களே! வணக்கத்திற்குரிய சகோதர, சகோதரிகளே.

இந்திய நிரந்தர இயக்கமும், ஆசிய பசிபிக் கூட்டமைப்பும் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் இணைந்து நடத்தும், வீழ்நிலை மனவோட்ட நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எமக்கு பெருமையும், பணிவும், நிறைவும் தருகிறது.

இந்தியாவில், தமிழகத்தில், கோவை மாநகரில் உள்ள கௌமாரத் திருமடம், வீழ்நிலை மனவோட்டத்தை மேம்படுத்த ஆற்றிவரும் பணிகளை அந்த திருமடத்தின் தலைவர் என்ற முறையில் இங்கு வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கௌமாரத் திருமடம் நூறாண்டுக்கு முன்பு 1907 இல் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழகத்தின் மேற்குப் பகுதியாகிய கொங்கு மண்டலத்தில் சமயம், சமூகம், இலக்கியம், கல்வி சார்ந்து திருமடம் பல பணிகளை ஆற்றி வருகிறது.

நகர்ப்பகுதி, பேரூர்ப் பகுதி, சிற்றூர்ப் பகுதி எனப் பிரிந்துள்ள இந்த மண்டலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தப் பணிகள் அமைந்துள்ளன.

இந்தியா பரந்தநாடு; வேறுபட்ட மக்களினம் கொண்டது. 1.25 பில்லியன் மக்கள் தொகை கொண்டது. இவர்கள் நகரம், பேரூர், சிற்றூர்களில் வாழ்கிறார்கள். இதில் நாடு முழுவதும் சிறிதளவு மக்கள் வீழ்நிலை மனவோட்டம் கொண்டவர்களாக உள்ளனர். வீழ்நிலை மனவோட்டம் கூட்டமைப்பு நன்கு செயல்படுகிறது.

மேற்கண்ட குறைபாட்டினை எடுத்துரைப்பதிலும் அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியா முழுமையும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு சிறு பகுதியாகக் கெளமாரத் திருமடமும், கௌமாரம் பிரசாந்தி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் கௌமாரம் பிரசாந்தி அகடமி பணியாற்றி வருகின்றன.

வீழ்நிலை மனவோட்டம் உட்பட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு கௌமாரம் பிரசாந்தி அகாடமி முக்கியத்துவம் தருகிறது. இந்தக் குழந்தைகளின் உள்ளேயும் பல திறமைகள் புதைந்து கிடக்கின்றன.

அவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தனிப்பட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அறிவு, உடல், மனம் சார்ந்து இவை குழந்தைகளைப் பண்படுத்துகின்றன. புதியதொரு வாழ்வு இந்தக் குழந்தைகளுக்குக் கிடைகிறது. இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனி நபர்; ஒவ்வொருவருக்கு உள்ளேயும் தனிப்பட்ட சிறப்பியல்புகள் இருக்கும். அகாடமி அவற்றை வளர்க்கவும் வெளிக்கொனர்வுமான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு அளிக்கிறது.

இந்தப்பள்ளி (அகாடமி) கௌமார திருமடத்துத் திருக்கோயிலை ஒட்டி, தெய்வ மணம் கமழும் சூழலில் விளையாட்டு மைதானம் உள்ள திறந்த வெளியில் பலவசதிகளைக் கொண்டதாகக் குழந்தைகளின் தேவையை நிறைவு செய்வதாக உள்ளது. அறநெறிகள், விழுமியங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பாடத்திட்டத்தில் குழந்தையின் முழு ஆளுமையும் வளர்ந்து நிறையும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாமல் வெளியிலிருந்தும் தக்க தேர்ந்த வல்லுநர்களையும் அழைத்துச் சொற்பொழிவுகளும் நடத்தப்படுகின்றன.

பணிசார்ந்த பயிற்சி மருத்துவர்கள், சிறப்புநிலைக்கற்பிப்போர், பேச்சுப் பயிற்சியாளர், இயற்கை மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர், உடற்பயிற்சி ஆசிரியர், உடற்பயிற்சி மருத்துவர், இசைப்பயிற்சியாளர், கலைப்பயிற்சியாளர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள் அல்லாமல் தொழில்சார்ந்த பயிற்சிகள் கணினி இணையதளம் மூலம் கற்பிக்கப்படுகின்றன. உடலசைவுகள், உறுப்பு அசைவுகள் போன்றவையும் அந்தந்த வல்லுநர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டுக் குழந்தைகள் ஆளுமை வளரத் துணை செய்யப்படுகிறது.

இவையல்லாமல் வேறு ஒரு சிறப்பு நோக்கமும் அகாடமியின் பயிற்சியில் உள்ளது. உடல், உள்ளம், அறிவு சார்ந்த அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து பயிற்சிகள் மூலம் வளர்த்தி அவர்களுள்ளே மறைந்து கிடைக்கும் தனித் திறைமைகளைத் தூண்டி மற்ற மாணவர்கள் படிக்கும் பள்ளியில் அதே பாடத்திட்டத்தில் அமரவைத்துப் படிக்கச் செய்வதே ஆகும்.

எவ்விதச் சமுதாயப் புறக்கணிப்புக்கும் அவர்கள் ஆளாகக் கூடாது என்பதே அடிப்படை. இயல்பான மற்ற மாணவர்களுக்கு சமமாகத் தம்மாலும் படிக்கவும் சாதிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை இந்த மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

இது நிறைவேறும் வகையில் குழந்தை பிறந்ததிலிருந்து அதன் வளர்ச்சியைக் கண்டறிந்து பெற்றோருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கேற்ற முறைகளைக் கற்பித்து வருகிறோம். முன்பு சொன்னது போல, கல்வி சார்ந்தும் சிறப்பு மருத்துவ முறைகள் சார்ந்ததுமான போதனைகள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் இந்தக் குழந்தையும் தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது.

இவை சரியே ஆனால் அகாடமியின் இன்னொரு நோக்கம் இன்னும் சிறப்பானது. இந்த குழந்தைகள் யாரையும் சார்ந்திராமல் தங்கள் வேலைகளைத் தாமே செய்து கொள்ளும் பரிபூர்ண சுதந்திரம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கூடவே தம் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் சம்பாதிக்கும் வழியையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதனால் கற்றுக்கொள்வதில் மேல் சொன்ன படிநிலைகளைக் கடந்தவர்கள் அல்லது முறையான கல்வி கற்கும் வயது தாண்டியவர்கள் பயன்பெறும் வகையில் அவரவர் திறைமைக்கேற்பத் தொழில் சார்ந்த பயிற்சி தரப்படுகிறது. இதுவரை அவர்கள் பாடங்களாகப் படித்தவை தொழில்களாக மாற்றப்படுகின்றன.

இவை தவிர, தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துதல், பயன்பாட்டுக் கணிதம், மொழித்திறன் வளர்த்தல், விற்பனைத் திறன் வளர்த்தல், பணம் சார்ந்த செய்திகள், செய்தித் தொடர்பு இவை போன்று சமுதாயம் தொடர்பான பிரிவுகளில் பயிற்சி முடித்த மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தம் பெறுகிறார்கள்.

கூடிய விரைவில் அகாடமி சார்ந்து தனியாகவே ஒரு வணிகமையம் திறக்கப்பட உள்ளது. குழந்தைகள் செயல்பட்டுப் பொருளாதார நிலையில் முழு நிறைவு பெறுவார்கள். இதே போல் சற்று வயது மூத்த குழந்தைகளுக்குச் சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல், கடைக்குப் போய் பொருள்கள் வாங்கி வருதல். போன்றவற்றில் பயிற்சி தந்து, தங்கள் குடும்பப் பொறுப்பைத் தாங்களே ஏற்கும் திறமை பெறச் செய்வதும் நோக்கம்.

ஆர்வமுள்ள மாணவருக்குத் தட்டச்சு, கணிணியில் விபரம் பதித்தல், ஒளிஅச்சு எடுத்தல், தாள் வழவழப்பாக்கல் போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன. அலுவலகம் சார்ந்த பணிகளை அவர்கள் வெற்றியுடன் செய்ய இது வாய்ப்பு தரும்.

யோகா பயிற்சி நாளும் செய்தால் குழந்தைகள் மனதில் தெளிவு தோன்றும். தசைத் திறன், ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவித்திறன், கவனக் கூர்மை இவை பெருகும். செரிமானம் நன்றாக நடைபெறும். நோய்தடுப்புச் சக்தி கூடும். கூடவே அளவான எடையில் உடம்பு பொலியும்.

கௌமார பிரசாந்தி அகாடமி பஞ்ச கர்மா, மூலிகை மருந்து, நீர் மருத்துவம் போன்ற பிற பயிற்சிகளையும் அளிக்கிறது.

படங்களைப் பார்த்துச் செய்தித் தொடர்பு கொள்ளுதல், குரல், ஒலித்தல் மூலம் ஐபேடு பயன்படுத்திப் பட அட்டைகள் மூலம் தானாகவே பேசிப்பழகிச் செய்தித் தொடர்பு ஏற்படுத்த வழி செய்வதில் அகாடமி வழிகாட்டுகிறது.

பேச வராமை ஒரு நோய் போன்றது. இதற்கான காரணத்தைக் கண்டறியும் நிபுணர் – பேச்சு மருத்துவர் – இப்படிப்பட்ட குழந்தைகளிடம் தனித்தனியாகப் பழகி, அவர்களின் இயலாமையை அறிந்து கொள்கிறார். பின்பு அவரவர் குறைக்கு ஏற்பத் தனியான பயிற்சி முறையை வகுத்து மெள்ள மெள்ள அவர்களைப் பேச வைக்கிறார்.

அகாடமியில் இசையின் பயன்பாடு இரண்டு வகையானது. ஒன்று அதை மருத்துவமாகக் கொள்வது. இன்னொன்று அதைக் கலையின் வெளிப்பாடாகக் குழந்தைக்கு ஆர்வமூட்டுவது.

இசையை மருத்துவமாகப் பயன்படுத்தும் போது பெரும்பாலும் வாய்ப்பாட்டாகக் கற்றுத் தரப்படுகிறது. எல்லாரும் ஒன்றாகக் கூடிப் பாடும் போது மன அமைதி ஏற்பட்டுக் குழந்தைகள் நடத்தையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்ப்படுகிறது. இவை தவிர இசைப்பெட்டி, தோல் கருவிகள் வாசிக்கவும் பழகுகிறார்கள்.

கௌமார பிரசாந்தி அகாடமி ஆசிரியர்கள் குழந்தைகளின் மற்ற ஆர்வங்கள் வெளிப்படத் தூண்டு கோலாகவும் இருக்கிறார்கள். தானியங்களுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து விதவிதமான தின்பண்டங்கள் செய்வது, காகிதப் பைகள் தயாரிப்பது போன்ற சுயதொழில் பயிற்சியும் மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

வாசல்படி விரிப்புகள், மாலைகள், காகித உரைகள், பலவிதமான பைகள் போன்றவையும் மாணவர்களால் இங்கு செய்யப்படுகின்றன. தொடர்ந்து அகாடமி காட்டும் ஈடுபாடும் தரும் பயிற்சியும், அக்கறையும் இவற்றுக்குக் காரணங்கள்.

எதிர்காலத்தில் கௌமாரம் பிரசாந்தி அகாடமி, குழந்தைகளுக்காகவும், அவர்களுடைய குடும்பங்களுக்ககவும் கூட்டாகச் சேர்ந்து வாழும் ஒரு அமைப்பை உருவாக்க உள்ளது.

இந்தக்குடும்பங்களுக்கு ஏற்றவாறு வீடுகளும், பொழுது போக்கு வசதிகளும் செய்து தரப்படும். குழந்தைகள் பள்ளிச் சூழ்நிலையைத் தாண்டி வாழவும், பணிபுரியவுமான சூழலை இந்தக் கூட்டுச் சமுதாய அமைப்பு உருவாக்கி உதவும். ஒருவர்க்கொருவர் அன்புடையவர்கள், ஒருவர் மீது ஒருவர் உரிமையுடையவர்கள் என்பது போலக் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஒரு தனித்த பார்வை கிடைக்கும்.

நிறைவாக, கௌமாரத் திருமடமும், கௌமாரம் பிரசாந்தி அகாடமியும் வீழ்நிலை மனவோட்டம் சார்ந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீழ்நிலை மனவோட்டம் இயக்கத்திற்கு முழு ஆதரவும் தருவோம் என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாய்ப்பு அளித்த இவ்வமைப்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers