அடுத்தடுத்த தோல்வி: படுமோசமான நிலையில் அனில் அம்பானியின் நிறுவனம்

Report Print Raju Raju in நிறுவனம்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி தற்போது தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார்.

அதிலும் முக்கியமாக அவரின் ரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அடுத்தடுத்த பின்னடைவை சந்தித்து வருகிறது.

ஜியோ அறிமுகமான பின் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனத்தை முழுமையாக வாங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கடைசிக்கட்டத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள் இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனையடுத்து ஆர்காம் (ரிலையன்ஸ்) நிறுவனத்தின் டவர் வர்த்தகத்தின் ஒரு பகுதியை, இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் கனடா நாட்டின் ப்ரூக்பீல்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டது.

விற்பனை மதிப்பு 7100 கோடி என்பதால் அதை வைத்து 47000 கோடி கடனில் கொஞ்சம் அடைக்கலாம் என அனில் அம்பானி நினைத்தார்.

ஆர்காம் கடன் வாங்கிய எஸ்பிஐ தலைமையிலான வங்கி அமைப்பு முன்னிலையில் இத்திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்கான ஆய்வை நடத்திய வங்கி அமைப்பு விற்பனைக்கு மறுப்பு தெரிவித்தது.

ஆர்காம் - இன் டவர் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்பதை விடவும் இந்நிறுவனத்தை முழுமையாக அதாவது டவர் மற்றும் பைபர் சொத்துக்களை விற்பனை செய்தால் சந்தையில் இதன் வியாபாரம் பெரிய அளவில் இருக்கும் என வங்கி தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, பார்தி இன்பராடெல், இன்டஸ், ஏடிசி, ப்ரூக்பீல்டு, ஜியோ, ரஷ்யாவின் சிஷ்டமா ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியின் ஆர்காமை முழுவதுமாக வாங்க விருப்பம் தெரிவித்தனர்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வருகிற டிசம்பர் 1 முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு 2ஜி, 3ஜி சேவைகளை முழுமையாக நிறுத்தி விட்டு 4ஜி டேட்டா சேவை மட்டுமே அளிக்கும் என அறிவித்துள்ளது.

இத்தகைய மோசமான சூழலில் அண்ணன் முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து அனில் அம்பானி வர்த்தகம் செய்தால் நல்ல வருவாய் கிடைப்பதோடு, கடனையும் அடைக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்