169 ஓட்டங்கள் விளாசிய குஷால் மெண்டிஸ்! இலங்கை அணி 282 ஓட்டங்கள் குவிப்பு

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 282 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலயில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்சில் 117 ஓட்டங்களில் சுருண்டது. அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஓ'கீபே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா அணி அறிமுக வீரர் லாக்‌ஷன் சந்தகன், அனுபவ வீரர் ரங்கண ஹேரத் ஆகியோரின் அபார பந்துவீச்சில் சிக்கியது.

இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 203 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. அந்த அணித்தரப்பில் ஆடம்வோக்ஸ் 47 ஓட்டங்கள், அணித்தலைவர் சுமித் 30 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை பந்து வீச்சாளர்களில் ரங்கண ஹேரத் மற்றும் லாக்‌ஷன் சந்தகன் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

பின்னர் 86 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணிக்கு தொடக்க வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

குஷால் பெரேரா(4), கெளஷால் சில்வா (7), கருணாரத்னே (0), அணித்தலைவர் மேத்யூஸ் (9) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற அந்த அணி 100 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது.

இந்நிலையில் பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த குஷால் மெண்டிஸ் சதம் விளாசினார். சந்திமால் (42), தனன்ஜெயா (36) ஆகியோர் தங்கள் பங்கிற்கு ஓரளவு ஓட்டங்கள் எடுத்தனர்.

இதனால் இலங்கை அணி நெருக்கடியில் இருந்து மீண்டது. இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 282 ஓட்டங்கள் எடுத்துள்ள இலங்கை அணி 169 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த குஷால் மெண்டிஸ் 169 ஓட்டங்களுடனும், தில்ருவன் பெரேரா 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments