வார்னர் அசத்தல் சதம்: கடைசி போட்டியிலும் மண்ணை கவ்விய இலங்கை

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இந்த தொடரை ஏற்கனவே அவுஸ்திரேலியா 3-1 என கைப்பற்றியுள்ள நிலையில், 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பல்லேகெலவில் நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

195 ஓட்டங்களில் சுருண்டது

தொடக்க வீரர்களாக களமிறங்கிய தனன்ஜெய டி சில்வா (34), குணத்திலக (39) ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

ஆனால் அடுத்து வந்த அணித்தலைவர் சந்திமால் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மெண்டிஸ் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேத்யூஸ்க்கு பதிலாக களமிறங்கிய உபுல் தரங்கா 15 ஓட்டங்களே எடுத்தார். இதன் பின்னர் வந்த வந்த தசன் ஷனக (13), குஷால் பெரேரா (14) ஆகியோரும் நிலைக்கவில்லை.

சச்சித் பத்ரிராண கடைசி நேரத்தில் நிதானமாக ஆடி 32 ஓட்டங்கள் சேர்த்தார். அடுத்து வந்த தில்ருவான் (5), சுரங்க லக்மல் (0) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இலங்கை 40.2 ஓவரில் 195 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜம்பா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வார்னர் அசத்தல் சதம்

இதனையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக அணித்தலைவர் வார்னர், மாத்யூவ் வாடே களமிறங்கினர். இந்த நிலையில் மாத்யூவ் வாடே 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த காவாஜாவும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதன் பின்னர் வார்னர், பெய்லி ஜோடி நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்ப்பில் ஈடுபட்டது. சிறப்பாக விளையாடி வந்த நிலையில் பெய்லி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

டிராவிஸ் ஹெட் (13) நிலைக்கவில்லை. கடைசி வரை நிதானமாக ஆடி வந்த வார்னர் சதம் விளாசினார். அவர் 126 பந்தில் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா

பின்னர் வந்த ஹஸ்டிங்ஸ் (4) ஒரு பவுண்டரி விளாச அவுஸ்திரேலிய அணி 43 ஓவரில் 5 விக்கெட் இழந்து 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments