கடைசி ஓவரில் நடந்த த்ரில்: ஒரு ஓட்டத்தில் கிண்ணத்தை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

பத்தாவது ஐ.பி.எல் தொடரின் கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று ஹைதராபாத்தி நடைபெற்றது.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோகித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 10 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சிம்மன்ஸ்(3), பார்த்திவ் பட்டேல்(4) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் ராயுடு 12 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் ரோகித் சர்மாவும் 24 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் 56 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பொல்லார்டும் 7 ஓட்டங்களில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா(10), கேவி.சர்மா(1) ஓட்டங்களில் ஆட்டமிழக்க 79 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது மும்பை இந்தியன்ஸ்.

இதனால் 100 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இறுதியில் குணால் பாண்டியா இறுதி வரை நின்று விளையாடி 47 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தில் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. புனே அணி தரப்பில் உனந்த்கண்ட், ஜம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் உனந்த்கண்ட் 4 ஓவர்களில் 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே அணிக்கு துவக்க வீரர்களாக ரகானே, திருப்பதி களமிறங்கினர்.

திருப்பதி இரண்டாவது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணியின் தலைவர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

புனே அணியின் எண்ணிக்கையும் சீரான வேகத்தில் எகிறியது. சிறப்பாக ஆடிவந்த ரகானே அணியின் எண்ணிக்கை 71 ஓட்டங்களை எட்டிய போது 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து வந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டோனி-ஸ்மித்துடன் இணைந்து ஆமைவேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் புனே அணி 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் புனே அணிக்கு கடைசி 5 ஓவரில் 47 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

நிதானமாக ஆட வேண்டும் என்று நினைத்து ஆடிய டோனி எதிர்பாரதவிதமாக 10 ஓட்டங்கள் எடுத்த போது பும்ரா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் தனி ஒரு ஆளாக போரடிய ஸ்மித் தன்னால் முடிந்த அளவிற்கு இடைவெளியில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் அடித்து வந்தார்.

இறுதியில் புனே அணிக்கு கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஜான்சன் வீச, முதல் பந்தை எதிர்கொண்ட திவாரி பவுண்டரி அடித்து புனே ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 5 பந்தில் 7 ஓட்டங்கள் என்ற போது, இரண்டாவது பந்தில் திவாரி அவுட் ஆகி பெளலியன் திரும்பினார்.

மூன்றாவது பந்தில் ஸ்மித்தும் அவுட்டாக மும்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது.

கடைசி இரண்டு பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் புனே அணியால் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் புனே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்கள் எடுத்து 1-ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி அடைந்ததுடன், மூன்றாவது முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments