ஆஷஸ் தொடர்: ஒரு வரலாற்றுப் பார்வை.

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

உலகின் மிகவும் பழமையான சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடராக விளங்குகின்ற கிரிக்கெட் உலகின் தாயகமான இங்கிலாந்து மற்றும் பிரபல அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் (Ashes) தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியா பிரிஸ்பேனில் நாளை (23) ஆரம்பமாகவுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் தொடரில் கௌரவத்துக்காக எதையும் இழக்கத் தயார் என்கிற ரீதியில் இரு அணிகளும் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடுகின்ற போட்டியாகவே கருதப்படுகின்றது. இதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.

‘ஆஷஸ்’ பெயர் வந்தது எப்படி?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 85 என்ற ஓட்ட இலக்கை கூட எடுக்க முடியாமல் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து 77 ஓட்டங்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலியா ருசித்த முதல் வெற்றி இதுவாகும்.

இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு கொதித்து போன ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ (The Sporting Times) என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ‘இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆஷஸ்) அவுஸ்திரேலியா எடுத்து செல்கிறது’ என்று எழுதப்பட்டிருந்தது. பிறகு 1882–83 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற போது இழந்த ஆஷஸை மீண்டும் இங்கிலாந்து கொண்டு வருமா? என்ற அந்தப் பத்திரிகை கேள்வி எழுப்பியது. இங்கிலாந்து அணியின் தலைவர் இவோ பிலிக், இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்பக் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார். அதுபோலவே இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2–1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றியது. அப்போது மெல்பேர்னில் குழுமியிருந்த சில பெண்கள், கலை நயத்துடன் கூடிய சிறிய ஜாடியை இவா பிலிக்கிடம் பரிசாக அளித்தனர். இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப வழங்குகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில், ஸ்டம்பின் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை சாடிக்குள் வைத்திருந்தனர். இதன் பின்னனியில் தான் ஆஷஸ் பெயர் தோன்றியது.இவோ பிலிக் மறைந்த பிறகு அந்த சிறிய சாடி 1927ஆம் ஆண்டு மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது அது லண்டன் லோர்ட்ஸில் உள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது போன்று வடிவமைக்கப்பட்ட கிண்ணத்தைத் தான் தொடரில் வெற்றி காணும் அணிக்கு பரிசாக வழங்கப்படுகிறது.

ஆஷஸ் பெயர் உருவான பிறகு இவ்விரு அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்றுள்ள டெஸ்ட் தொடர்களில் அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தலா 32 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளன. 5 தொடர் சமநிலையில் முடிந்தது.

பிரிஸ்பேன், அவுஸ்திரேலியாவுக்கு ராசியான மைதானமாகும். இங்கு 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியை யாரும் வீழ்த்தியது கிடையாது. கடந்த 29 ஆண்டுகளில் அவுஸ்திரேலியா இங்கு விளையாடியுள்ள 28 டெஸ்ட் போட்டிகளில் 21 இல் வெற்றியும், 7 இல் சமநிலையும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், அண்மைக்காலமாக எந்த நாட்டில் ஆஷஸ் தொடர் நடைபெறுகின்றதோ அந்த நாட்டு அணிக்கே தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இதன்படி, தமது கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இரு அணிகளும் பலத்த போட்டியைக் கொடுக்கும் அதேநேரம் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வார்த்தை போரையும் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறும். இறுதியாக 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் வென்று இருந்தது. எனினும் 2013-2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 0-5 என இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணியால் வைட் வொஷ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 70 ஆவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் இருவரும் முதல் முறையாக அணியை வழிநடத்துகிறார்கள். இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சொந்த மண்ணில் சாதிக்குமா அவுஸ்திரேலியா?

இந்த முறை சொந்த மண்ணில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை உத்வேகத்துடன் எதிர்கொள்ளக் காத்திருக்கிறது. காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட் அணிக்கு திரும்பியிருப்பது அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தியுள்ளது.

எனினும், நேற்றைய களத்தடுப்பு பயிற்சியின் போது அவ்வணியின் உப தலைவர் டேவிட் வோர்னர் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கினால் பாதிக்கப்பட்டார். கழுத்தில் ஏற்பட்டுள்ள பிடிப்புக்கு சிகிச்சை பெறுவதாகவும், முதலாவது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல் தகுதியை பெற்றுவிடுவேன் என்று நம்புவதாகவும் வோர்னர் குறிப்பிட்டார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வோர்னருடன் அறிமுக வீரர் கெமரூன் பான்கிராப்ட் களம் இறங்குகிறார். துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமாக அமையவுள்ளது.

இந்நிலையில், டேவிட் வோர்னரின் காயத்தைக் கருத்திற்கொண்டு அதிரடி ஆட்டக்காரர் கிளென் மெக்ஸ்வெல்லை அணியில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவுஸ்திரேலிய மண்ணில் மெக்ஸ்வெல் விளையாடுகின்ற முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாக இது அமையவுள்ளது.

அடுத்து அவ்வணியின் விக்கெட் காப்பாளரான பிரெட் ஹெடினைப் போன்று சிறப்பாக செயற்படக்கூடிய டிம் பெய்னுக்கு சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாக கருதப்படுகின்றது. அதேபோன்று அனுபவமிக்க வீரரான ஷோன் மார்ஷ் அவ்வணியில் இடம்பெற்றிருப்பது இன்னும் பலத்தை சேர்க்கவுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலிய அணித் தேர்வு, அவ்வணியின் முன்னாள் வீரர்கள் மத்தியில் மிகப் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்திய போதும் ஆஷஸ் போன்ற தொடர்களில் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை அவ்வணிக்கு சாதகமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

மொத்தத்தில் இத்தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணி, பலமிக்க அணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கிண்ணத்தை தக்கவைக்குமா இங்கிலாந்து?

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஆஷஸ் கிண்ணத்தை தக்கவைக்க தீவிர முனைப்பு காட்டுகிறது. கடந்த 5 ஆஷஸ் தொடர்களில் 4 தொடர்களில் இங்கிலாந்து அணிதான் மகுடம் சூடியது. ஆனால் இந்த முறை அவர்களின் ஆதிக்கம் நீடிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

முன்னாள் அணித்தலைவரான அலெஸ்டயார் குக் தொடர்ந்து ஓட்டங்களைக் குவிக்காமை, அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் போர்ட் திறமைகளில் பின்னடைவு போன்றவற்றால் அவ்வணி பின்னடைவை சந்தித்துள்ளது.

அத்துடன், அந்த அணிக்கு சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் ஆணிவேராக விளங்கினார். பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் மிரட்டக்கூடியவர். இரவு விடுதியில் குடித்து விட்டு இளைஞர் ஒருவரைத் தாக்கிய வழக்கில் அவர் மீது பொலிஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அவர் அணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இல்லாதது இங்கிலாந்துக்கு நிச்சயம் ஒரு பின்னடைவாகும். ஆனால் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் எங்களால் சாதிக்க முடியும் என்று இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து ஆடுகளங்களுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலிய மைதானங்கள் வித்தியாசமாக இருப்பதால் அவ்வணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரவரிசையில் மாற்றம் ஏற்படுமா?

ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் முதல் 7 இடங்களில் முறையே இந்தியா (125 புள்ளிகள்), தென்னாபிரிக்கா (111 புள்ளிகள்), இங்கிலாந்து (105 புள்ளிகள்), நியூசிலாந்து (97 புள்ளிகள்), அவுஸ்திரேலியா (97 புள்ளிகள்), இலங்கை (94 புள்ளிகள்), பாகிஸ்தான் (88 புள்ளிகள்) ஆகிய அணிகள் உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 2–0 அல்லது அதைவிட சிறந்த முடிவை அவுஸ்திரேலியா எட்டும் போது தரவரிசையில் 3 ஆவது இடத்துக்கு முன்னேற முடியும். தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக வென்றால் அவுஸ்திரேலியாவின் புள்ளிகள் 106 ஆக உயரும். அப்போது இங்கிலாந்தின் புள்ளிகள் 98 ஆக சரிவடையும். இதேபோல் அவுஸ்திரேலியா 4–0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினால் 104 புள்ளிகளையும், 4–1 அல்லது 3–0 என்ற கணக்கில் வென்றால் 103 புள்ளிகளையும், 3–1, 2–0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் பட்சத்தில் 102 புள்ளிகளையும் எட்டும்.

அதே சமயம் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 5–0 என்று முழுமையாக வசப்படுத்தினால் அதன் புள்ளி எண்ணிக்கை 110 ஆக உயரும். அவ்வாறான சமயத்தில் அவுஸ்திரேலியா 91 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்துக்கு தள்ளப்படும். இங்கிலாந்து அணி 4–0 என்ற கணக்கில் வென்றால் 109 புள்ளிகள், 4–1, 3–0 என்ற கணக்கில் வென்றால் 108 புள்ளிகள், 3–2, 2–1, 1–0 என்ற கணக்கில் வென்றால் 106 புள்ளிகள் ஆகிய நிலைகளை அடையும். எனவே இப்போட்டித் தொடரானது இரு அணிகளுக்கும் தரவரிசையில் தமது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கான போட்டித் தொடராகவும் அமையவுள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு

அவுஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (அணித்தலைவர்), டேவிட் வோர்னர், கெமரூன் பான்கிராப்ட், ஜெக்சன் பேர்ட், பெட் கம்மின்ஸ், ஹேன்ட்ஸ்கோம்ப், ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நெதன் லையன், ஷோன் மார்ஷ், டிம் பெய்ன், சோட் சயேர்ஸ், மிட்செல் ஸ்டார்க்

இங்கிலாந்து: ஜோ ரூட் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனி பெயரிஸ்ட்ரோ, ஜெக் போல், கெரி பெலன்ஸ், ஸ்டூவர்ட் பிரோட், அலெஸ்டயர் குக், மோசோன் கிரேன், பென் போக்ஸ், ஜோர்ஜ் கார்டன், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டான், மார்க் ஸ்டோன்மான், ஜேம்ஸ் வின்சி, கிறிஸ் வோக்ஸ்

போட்டி அட்டவணை

  1. நவம்பர் 23–27: முதலாவது டெஸ்ட் – பிரிஸ்பேன்
  2. டிசம்பர் 2–6: இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்
  3. டிசம்பர் 14–18: மூன்றாவது டெஸ்ட் – பேர்த்
  4. டிசம்பர் 26–30: நான்காவது டெஸ்ட் – மெல்போர்ன்
  5. ஜனவரி 4–8: ஐந்தாவது டெஸ்ட் – சிட்னி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்