தென்னாபிரிக்காவின் அசைக்க முடியாத ஜாம்பவான் ஜாக் கலிஸ்: ஒரு வரலாற்றுப்பார்வை

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

கலிஸ் தென்னாபிரிக்காவுக்காக கிரிக்கெட் ஆடிய காலங்கள் நிச்சயமாக பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையே, உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த சகலதுறைவீரர் யார்? என்ற வினா தொடுக்கப்படும் இடத்தில் பதிலாக வந்து நிற்பார் இந்த கலிஸ். ஒரு வலதுகை துடுப்பாட்ட வீராகவும் வலதுகை மத்திய வேக “சுவிங்” பாணியில் பந்துவீசும் திறன் கொண்டவராகவும் உள்ள இவர் 16/10/1975 இல் பிறந்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முறையே பத்தியாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் இருநூற்றி ஐம்பதுக்கும் அதிகமான விக்கெட்டுக்களையும் வீழ்த்திய முதலாவதும் ஒரேயொரு வீரரும் இவரே. தென்னாபிரிக்கர்களின் பிரதான பந்துவீச்சாளர்களால் பிரிக்கமுடியாத விக்கெட்டுக்களை தனது பந்துவீச்சால் தகர்த்து எறிபவர் இவர்.

ஜாக்ஸ், வூகி போன்ற புனை பெயர்களால் அழைக்கப்படும் கலிஸ் டெஸ்ட் போட்டிகளில் 14/12/1995 அன்று இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகினார். ஒருநாள் போட்டிகளில் அதே இங்கிலாந்துக்கு எதிராக 09/01/1996 இல் அறிமுகமாகினார். இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளை ஆடினாலும் அவரது சராசரி 55 இலும் அதிகமாகவே காணப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரையான மூன்று மாத காலப்பகுதியில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஐந்து சதங்களை விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாது சச்சினுக்கு அடுத்ததாகஅதிக டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளார். இதுவரை 45 டெஸ்ட் சதங்களை கலிஸ் விளாசியுள்ளார். முக்கியமான விடயம் என்னவென்றால் தான் ஓய்வு பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்கா சார்பில் முதலாவது வீரராகவும் மொத்தமாக நான்காவது வீரராகவும் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை கடந்துள்ளார். சகல விதமான போட்டிகளில் இருந்தும் இவர் 30/07/2014 இலேயே ஓய்வு பெற்றார். தற்பொழுது கொல்கத்தா அணியில் பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.

1998 இல் ஐசிசி சாம்பியன் கிண்ண தொடரில் இரண்டு ஆட்டநாயகன் விருதுகளுடன் சேர்த்து தொடர்நாயகன் விருதையும் வென்றுள்ளார். நான்காவது வீரராக கலிஸ் டெஸ்ட் போட்களில் தொடர்ச்சியான ஐந்து சதங்களை விளாசியுள்ளார். 2005 இல் சிம்பாவேக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் 24 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். 2007 இல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் விளாசினார். 2005 இல் உலக பதினொருவர் அணியில் தெரிவுசெய்யப்பட்டு ஆடினார். இப்போட்டி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவியினை பெறும்பொருட்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

2006 இல் கிறேம் சிமித்திற்கு ஏற்பட்ட காயம் காரணமாக கலிஸ் தலைமைப்பொறுப்பை ஏற்றமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறு இருப்பினும் 2007 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண இருபது இருபது அணியில் இவர் இடம்பெறவில்லை. 2010 இல் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் நாக்பூரில் வைத்து கலிஸ் 173 ஓட்டங்களைப் பெற்றமை சிறந்த இனிங்சாக இன்றும் கருதப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தைமாதம் இலங்கைக்கு எதிராக தனது அதிகபட்ச டெஸ்ட் ஓட்டமான 224 இனைப் பெற்றார். 2014 செம்டெம்பரில் பிக்பாஸ் தொடரில் சிட்னி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் சிட்னிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களைப் பெற்றதோடு ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். அதுமட்டுமல்லாது கலிஸ் 2008-2010 காலப்பகுதியில் பெங்களூர் அணிக்காகவும் 2011-2014 காலப்பகுதியில் கொல்கத்தா அணிக்காகவும் ஐபிஎல் போட்டிகளில் ஆடினார்.

இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கலிஸ் 82 போட்டிகளில் வெற்றியையும் 325 ஒருநாள் போட்டிகளில் 208 வெற்றிகளையும் 17 இருபது இருபது போட்டிகளில் பத்து வெற்றிகளையும் சுவைத்துள்ளார். இவ்வாறு பல சிறப்புடன் ஆடிய கலிஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து 26/12/2013 அன்று இந்தியாவுக்கு எதிராகவும் ஒருநாள் போட்டிகளிலிருந்து 12/07/2014 அன்று இலங்கைக்கு எதிராகவும் தனது இறுதிப்போட்டிகளை ஆடினார்.

இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கலிஸ் 13,289 ஓட்டங்களை சராசரி 55.37 இல் பெற்றுள்ளார். 224 என்பது அதிகபட்ச ஓட்டமாகும். இதில் 58 அரைச்சதங்களும் 45 சதங்களும் இரு இரட்டை சதங்களும் அடங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாது 292 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

328 ஒருநாள் போட்டிகளில் ஆடிய கலிஸ் 11579 ஓட்டங்களை சராசரி 44.36 இல் பெற்றுள்ளார். அதிகபட்சம் 139 ஓட்டமாகும். இதில் 86 அரைச்சதங்களும் பதினேழு சதங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாது 273 ஒருநாள் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை 25 இருபது இருபதுகளிலாடிய கலிஸ் 666 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பன்னிரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதுவரை 98 ஐபிஎல் போட்டிகளிலாடிய கலிஸ் 2427 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். இதில் பதினேழு அரைச்சதங்கள் அடங்கும். அதுமட்டுமல்லாது அறுபத்தி ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இவ்வாறு பல சாதனைகளுடன் ஓய்வுபெற்ற கலிஸ் இன்றும் பெருமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

vilaiyattu.com

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்