அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்
355Shares

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, இன்று சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டியில் விளையாடியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, இங்கிலாந்தின் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஜேசன் ராய் 19 ஒட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த ஹால்ஸும் ஆட்டமிழந்தார். இந்நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு ரூட், ராயுடன் இணைந்தார்.

ராய் 39 ஒட்டத்திலும், ஜோ ரூட் 27 ஒட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மோர்கன் தனது பங்குக்கு 41 ஒட்டங்கள் குவிக்க, அதிரடியில் இறங்கிய பட்லர் 83 பந்துகளில் சதமடித்தார்.

இதனைத் தொடர்ந்து, 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 302 ஒட்டங்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் தனது பங்குக்கு 53 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவுஸ்திரேலிய தரப்பில் ஹெசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில், துடுப்பாட்டத்தை துவங்கிய அவுஸ்திரேலிய அணியில், வார்னர் 8 மற்றும் ஒயிட் 17 ஒட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு அதிரடியாக விளையாடிய ஆரோன் பிஞ்ச் 62 ஒட்டங்கள் குவித்தார். அணித்தலைவர் ஸ்மித் 45 ஒட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

எனினும், மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் முறையே 55 மற்றும் 56 ஒட்டங்கள் விளாசினர்.

ஆனால், அவுஸ்திரேலிய அணியால் 50 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ஒட்டங்களே எடுக்க முடிந்தது. டிம் பெய்ன் 31 ஒட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இதன்மூலம், இங்கிலாந்து அணி 16 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்