வங்கதேச போட்டியில் இலங்கை வீரர்கள் பயன்படுத்திய முக்கிய கருவி: 11 மில்லியன் டொலர்கள் செலவு

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இலங்கை வீரர்கள் ஜிபிஎஸ் எனப்படும் கருவியை அணிந்து விளையாடியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கையில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இலங்கை அணியின் வீரர்களின் திறமையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், 2019-ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரை கருத்தில் கொண்டும் உலகின் பிரபல கால்பந்து கழகமாக பார்சிலோனா கழகம் பயன்படுத்துகின்ற விமு ப்ரோ என்ற தொழில்நுட்ப ஆய்வு நுணுக்கத்தை பின்பற்றுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கருவியை இலங்கை வீரர்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பொருத்திக் கொண்டு விளையாடியுள்ளனர்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் உடற் பயிற்றுவிப்பாளர் நிக் லீயன் கூறுகையில், இந்த விமு ப்ரோ என்ற மென் பொருள் பார்சிலோனா கால்பந்து கழகத்தினால் வீரர்களின் உடற் செயற்பாடுகளை ஆராய்வதற்காகவும், மைதானத்தில் உள்ள வீரர்களின் உடல் அசைவுகளை தொடர்ந்து மேற்பார்வை செய்து தகவல்களை பெற்றுக் கொள்ளுவதற்கும் உதவுகிறது.

அதே போன்று இலங்கை வீரர்களின் கிரிக்கெட் திறமைகளை ஆய்வு செய்யவும் அவர்களை உபாதைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் பார்சிலோனா கழகத்தினால் பயன்படுத்தப்படும் விமு ப்ரோ என்ற மென்பொருளை நாம் இலங்கை வீரர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதற்காக சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் திலங்கா சுமதி பாலா கூறியுள்ளார்.

மேலும் இது அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை கருத்தில் கொண்டு இலங்கை வீரர்களின் திறமைகளை மேலும் அதிகரிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு அங்கமாகவே வீரர்களுக்காக இந்த மென்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியில் சமீபகாலமாக வீரர்கள் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் இலங்கை அணி போட்டிகளின் போது முக்கிய வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. தற்போது இந்த மென் பொருள் பயன்படுத்தப்படுவதால் வீரர்களின் உடல்நிலை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவும் எனவும், அணியின் வெற்றிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவிகரமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்