அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பாகிஸ்தான்!

Report Print Kabilan in கிரிக்கெட்
139Shares
139Shares
lankasrimarket.com

ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடர், ஜிம்பாப்வேயில் நடந்தது.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களான ஆர்க்கி ஷார்ட் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி 9.5 ஓவர்களில் 95 ஓட்டங்கள் குவித்தது.

அப்போது பிஞ்ச் பர்ஃஹானிடம் கேட்ச் ஆனார். அவர் 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 5 ஓட்டங்களிலும், ஸ்டோனிஸ் 12 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.

AP

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், ஆர்க்கி ஷார்ட் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தார். இதில் 7பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர் 3 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் பர்ஹான் மற்றும் ஹுசைன் தலாத் இருவரும் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் களம் இறங்கிய சர்ப்பராஸ் அகமது 19 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தார். எனினும் தொடக்க வீரரான பக்ஹார் ஜமான் அதிரடியில் மிரட்டினார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிய அவர் 9 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார். 46 பந்துகளை சந்தித்த ஜமான், 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 91 ஓட்டங்கள் குவித்தார்.

AP
AP

பின்னர் சோயிப் மாலிக்கும், ஆசிஃப் அலியும் இணைந்து பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 19.2 ஓவர்களில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சோயிப் மாலிக் 43 ஓட்டங்களுடனும், அலி 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். அவுஸ்திரேலிய தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், ரிச்சர்டுசன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தோல்வி குறித்து அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் லாங்கர் கூறுகையில்,

‘எங்களின் அனுபவமின்மையை கடந்த ஆறு வாரங்களாக காட்டி வருகிறோம். நாங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இந்த தொடருக்கு பின், தலைமை உட்பட அனைத்தையும் நாங்கள் உற்று நோக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்