மைல்கல் போட்டியில் சொதப்பிய மேத்யூஸ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தம்புல்லாவில் இன்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி இலங்கையின் டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரபாடாவின் அபார பந்துவீச்சினால் டிக்வெல்லா 2 ஓட்டங்களிலும், தரங்கா 10 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த குசால் மெண்டிஸ் 3 ஓட்டங்களிலும், அணித்தலைவர் மேத்யூஸ் 5 ஓட்டங்களில் அவுட் ஆனார். இந்தப் போட்டி அவர் அணித்தலைவராக விளையாடும் 100வது போட்டியாகும்.

AFP

பின்னர் வந்த ஜெயசூர்யா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் இலங்கை அணி 8.5 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஆனால், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் குசால் பெரேரா தனி ஆளாய் நின்று ஓட்டங்களை குவித்தார். அவருடன் இணைந்த திசாரா பெரேரா அதிரடி காட்ட இலங்கையின் ஸ்கோர் உயர்ந்தது.

அணியின் ஸ்கோர் 128 ஆக உயர்ந்தபோது, திசாரா பெரேரா 30 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஷாம்சி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தனஞ்ஜெய 11 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

ICC

இதற்கிடையில் அரை சதம் கடந்த குசால் பெரேரா 72 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், இலங்கை அணி 34.3 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா மற்றும் ஷாம்சி தலா 4 விக்கெட்டுகளும், நிகிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தனஞ்ஜெயவின் பந்துவீச்சில் ஆம்லா 19 ஓட்டங்களிலும், மார்க்ரம் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

குவிண்டன் டி காக் 59 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் எடுத்து தனஞ்ஜெயவின் பந்துவீச்சில் லக்மலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் டூபிளிசிஸ்-டுமினி ஜோடி வெற்றியை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தது. டூபிளிசிஸ் 56 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 10 ஓட்டங்கள் அவுட் ஆனார். எனினும், ஜே.பி.டுமினி அரைசதம் அடித்து தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார்.

அந்த அணி 31 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி 32 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களிலும், வில்லியம் முல்டர் 14 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் தனஞ்ஜெய 3 விக்கெட்டுகளும், லக்மல் மற்றும் சண்டகன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...