தென் ஆப்பிரிக்காவிடம் மீண்டும் வீழ்ந்த இலங்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை அணி தம்புல்லாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

ஆரம்பத்திலேயே இலங்கைக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடக்க வீரர் தரங்கா(9), குசால் மெண்டிஸ்(0) ஆகியோரின் விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்காவின் நிகிடி வீழ்த்தினார்.

பின்னர் வந்த குசால் பெரேரா 12 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். எனினும், மற்றொரு தொடக்க வீரரான டிக்வெல்லவும், அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸும் இணைந்து இலங்கையை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 123 ஆக இருந்தபோது, 78 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் எடுத்திருந்த டிக்வெல்ல ஆட்டமிழந்தார்.

AFP

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷெஹான் ஜெயசூர்யா 18 ஓட்டங்களும், திசாரா பெரேரா 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஏஞ்சலோ மேத்யூஸ் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்கள் எடுத்தது. இறுதிவரை களத்தில் நின்ற மேத்யூஸ் 111 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களான டி காக் 78 பந்துகளில் 87 ஓட்டங்களும், ஆம்லா 43 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய டூபிளிசிஸ் தனது பங்குக்கு 49 ஓட்டங்கள் எடுத்தார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்து வெற்றி பெற வைத்த டுமினி, 32 ஓட்டங்களில் திசாரா பெரேரா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முல்டர் 19 ஓட்டங்களுடனும், பிலுக்வாயோ 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் தனஞ்ஜெய 3 விக்கெட்டுகளும், லக்மல், ரஜிதா மற்றும் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3வது ஒருநாள் போட்டி வருகிற 5ஆம் திகதி கண்டியில் நடைபெற உள்ளது.

AP
AFP/ISHARA S.KODIKARA
REUTERS/Dinuka Liyanawatte

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்