இங்கிலாந்தின் முன்னணி ஆல் ரவுண்டர் வீரர் ஓய்வு அறிவிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான பால் காலிங்வுட், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் பால் காலிங்வுட், அந்த அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சிறப்பை பெற்றவர் ஆவார்.

இவரது தலைமையில் கடந்த 2010ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வென்றது. அதன் பின்னர், 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து காலிங்வுட் ஓய்வு பெற்றார்.

காலிங்வுட், 2011ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியிலும், 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி டி20 போட்டியிலும் விளையாடியிருந்தார்.

இந்நிலையில், கவுண்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் தர்ஹாம் அணிக்காக விளையாடி வந்த காலிங்வுட், தற்போது நடைபெற்று வரும் கவுண்ட்டி சாம்பியன்ஸ்ஷிப் போட்டி தொடரின் இறுதியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

42 வயதாகும் பால் காலிங்வுட் இது குறித்து கூறுகையில், ‘இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் கடினமான, உணர்ச்சிப்பூர்வமான முடிவு. எனது கடைசி சக்தியை கூட கிரிக்கெட்டிற்காக செலவழித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

தர்ஹம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக என்னை அர்ப்பணித்தேன். அதற்காக கற்பனை செய்ய முடியாத சிறப்பை பெற்றேன். கிரிக்கெட் தாண்டிய எதிர்காலத்தை, புதிய சவால்களை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய காலிங்வுட் 4,259 எடுத்துள்ளார். அதிகபட்சமாக 206 ஓட்டங்களை ஒரு இன்னிங்ஸில் எடுத்துள்ளார்.

197 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,092 ஓட்டங்கள் மற்றும் 111 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 31 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாகும்.

பால் காலிங்வுட் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் (2006) ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த வீரர், இரட்டை சதம் விளாசிய 3வது இங்கிலாந்து வீரர் ஆகிய சாதனைகளை படைத்துள்ளார்.

அதே போல் ஒருநாள் போட்டிகளில் அதிக ஒருநாள் போட்டிகள் (197) விளையாடிய இங்கிலாந்து வீரர், அதிக ஓட்டங்கள் குவித்த 2வது இங்கிலாந்து வீரர் ஆகிய சாதனைகளையும் படைத்துள்ளார்.

PA

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers