சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்: இளம் வீரர் பிரித்வி ஷா உருக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

தான் சதத்தை எட்டியதும் நினைவுக்கு முதலில் வந்தவர் தனது தந்தை தான் என்றும், அவருக்கு சதத்தை அர்ப்பணிப்பதாகவும் இளம் இந்திய வீரர் பிரித்வி ஷா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணியின் அறிமுக வீரர் பிரித்வி ஷா தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்து அசத்தினார்.

இதனால், இளம் வயதில் அறிமுக போட்டியில் சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேபோல் உலகளவில் இளம் வயதில் சதமடித்தவர்களில் 4வது இடத்தையும், அதிவேக சதமடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தையும் பிடித்தார்.

இந்நிலையில் சதம் குறித்து பிரித்வி ஷா கூறுகையில், ‘இங்கிலாந்து தொடருக்கே நான் களமிறங்க தயாராக இருந்தேன். ஆனால் வாய்ப்பு இப்போது தான் கிடைத்திருக்கிறது. முதல் முறையாக சர்வதேச போட்டியில் ஆடியதால் தொடக்கத்தில் கொஞ்சம் பதற்றத்திற்கு உள்ளானேன்.

ஆனால், 10-15 ஓவர்களுக்கு பிறகு இயல்பாக விளையாட தொடங்கினேன். கணிசமான பவுண்டரிகளும் அடித்தேன். முடிந்த வரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டேன்.

இந்த சதம் எனக்கு போதுமானது அல்ல. ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்டது. இன்னும் கூடுதல் நேரம் பேட்டிங் செய்திருக்க வேண்டும். தேனீர் இடைவேளைக்கு 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் ஆட்டம் இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது.

சதத்தை எட்டியதும் எனது நினைவுக்கு முதலில் வந்தவர் எனது தந்தை தான். எனக்காக அவர் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார். எனக்கு எல்லா வகையிலும் அவர் பக்கபலமாக இருக்கிறார்.

அவருக்கு இந்த சதத்தை அர்ப்பணிக்கிறேன். மூத்த வீரர்களின் அனுபவத்தை ஓய்வறையில் பகிர்ந்து கொள்வது சிறப்பான விடயமாகும். புதுமுக வீரரான நான், ஓய்வறையில் சவுகரியமாக இருக்கும் வகையில் சீனியர் வீரர்கள் என்னை வழிநடத்துகிறார்கள்.

அணித்தலைவர் கோஹ்லியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், சீனியர்-ஜூனியர் பாகுபாடு இங்கு கிடையாது. நீ இந்திய அணிக்காக ஆடுகிறாய் என்றால் மற்றவர்களும் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள் என்று எப்போதும் கூறுவார்கள்.

அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்ததோடு, நெருக்கடி இல்லாமலும் பார்த்துக் கொண்டனர். இப்போது எல்லா வீரர்களும் எனக்கு நண்பர்கள் ஆகி விட்டனர்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்