சதத்துடன் ஓய்வு பெற்ற கிறிஸ் கெய்ல்: பேட்-ஐ உயர்த்தி மரியாதை செய்த வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தனது கடைசி முதல் தரப்போட்டியில் சதத்துடன் ஓய்வு பெற்றுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரரான் கிறிஸ் கெய்ல்(39), ஜமைக்கா அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடி வந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பார்படாஸ் அணியுடனான தனது கடைசி முதல் தரப்போட்டியில் களமிறங்கிய கெய்ல், 114 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.

இதன்மூலம் ஜமைக்கா அணி வெற்றி பெற்றது. முன்னதாக கெய்ல் களம் இறங்கிய போது, அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் தங்களது பேட்-ஐ உயர்த்தி பிடித்தபடி அவருக்கு மரியாதை செய்தனர்.

இதுவரை 356 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 12,436 ஓட்டங்கள் குவித்துள்ளார். போட்டிக்கு பின்னர் பேசிய கெய்ல் கூறுகையில்,

‘எனது கடைசி முதல் தரப்போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டியை வென்றதும் மகிழ்ச்சிதான். கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். தனிப்பட்ட முறையில் இது எனது சாதனைதான்.

கிரிக்கெட்டை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது. இனி என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். என் குழந்தைகளின் வளர்ச்சியை அவர்களுடன் இருந்து பார்க்க விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் முதல் தரப்போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக உலக கிண்ண தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். அத்துடன், பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers