ஒரு ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்திய வீரர்: 20 ஓட்டங்களில் முடிந்த டி20 போட்டி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய அணிகளுக்கான டி20 தகுதிச் சுற்றில் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் மியான்மர் அணி 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணம் தொடருக்கான ஆசிய அணிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தகுதிச் சுற்று ஏ பிரிவு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது தகுதிச் சுற்று பி பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மலேசியா, பூடான், தாய்லாந்து, சீனா, மியான்மர், நேபாளம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றன.

கடந்த 3-ம் திகதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 12-ம் திகதி நிறைவடைகிறது. இதில், தெரிவாகும் டாப் 3 அணிகள், ஏற்கெனவே தகுதிச் சுற்றில் ஏ பிரிவில் தெரிவான அணிகளுடன் ஐ.சி.சி டி20 ஆசிய இறுதி தகுதிச் சுற்றில் மோதும்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மலேசியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து, மியான்மர் அணி களமிறங்கியது. மலேசிய அணியின் பவன்தீப் சிங் முதல் ஓவரை வீசினார்.

முதல் பந்திலே விக்கெட். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது மியான்மர்.

முதல் மூன்று வீரர்களும் டக் அவுட் ஆகி வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக கோ அவுங் என்பவர் 3 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதற்கு அடுத்தபடியாக எக்ஸ்டிரா வகையில் கிடைத்த 3 ஓட்டங்கள்தான் அதிகம்.

10.1 ஓவர்கள் முடிவில் மியான்மர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 9 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

மலேசிய அணி சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய பவன்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி, மூன்று மெய்டன் உட்பட, ஒரு ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

மற்றொரு பந்துவீச்சாளரான அன்வர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மியான்மர் அணி இந்தப் போட்டியில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

அதன் பின்னர் மியான்மர் அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 8 ஓவர்கள் கொண்ட போட்டியாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக இலக்கு 6 ஓட்டங்களாக மாற்றப்பட்டது. 8 ஓவர்களில் 6 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மலேசியா அணி.

மலேசிய அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் ஓவரிலே அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினர்.

அதன் பின்னர் களமிறங்கிய அழகரத்னம் ஒரு ரன் தேவை என்ற நிலையில் சிக்ஸர் அடித்து, போட்டியை முடித்து வைத்தார்.

1.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மலேசிய அணி.

விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று நேபாளம் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர், மலேசியா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சீனா கடைசி இடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers