இலங்கையை திணறடித்த இங்கிலாந்தின் அறிமுக வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 321 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பர்ன்ஸை 9 ஓட்டங்களில் லக்மல் வெளியேற்றினார்.

பின்னர் வந்த மொயீன் அலியை முதல் பந்திலேயே போல்டாக்கினார் லக்மல். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், தொடக்க வீரர் ஜென்னிங்ஸுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் இந்த கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

ஜோ ரூட் 35 ஓட்டங்களில் ஹெராத்தின் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் ஜென்னிங்ஸ் 46 ஓட்டங்களிலும், பென் ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் பட்லர் தனது பங்குக்கு 38 ஓட்டங்கள் எடுத்தார்.

அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களாக இருந்தது. இந்நிலையில், பென் போக்ஸ் மற்றும் சாம் குர்ரன் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடியினால் இங்கிலாந்து அணி 200ஐ தாண்டியது.

சிக்சர்களாக விளாசிய சாம் குர்ரன் 48 ஓட்டங்களில் அவுட் ஆனார். ஆனால், அறிமுக வீரர் பென் போக்ஸ் இலங்கையின் பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். அடில் ரஷித் அதிரடியாக 35 ஓட்டங்கள் எடுத்து பெரேரா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 91 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் குவித்துள்ளது. போக்ஸ் 87 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார். இலங்கை அணி தரப்பில் பெரேரா 4 விக்கெட்டுகளும், லக்மல் 2 விக்கெட்டுகளும், தனஞ்செய மற்றும் ஹெராத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Getty Images

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்