அபார சதம் விளாசிய தமிழக வீரர் முரளி விஜய்! டிராவில் முடிந்த பயிற்சி ஆட்டம்

Report Print Kabilan in கிரிக்கெட்

சிட்னியில் நடைபெற்ற இந்தியா-அவுஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான 4 நாட்கள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. மழைக் காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா துடுப்பாட்டம் செய்தது.

பிருத்வி ஷா, புஜாரா, ரஹானே, கோஹ்லி மற்றும் விஹாரி ஆகியோரின் அரைசதத்தினால் இந்திய அணி 358 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 544 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹேரி நீல்சன் 100 ஓட்டங்களும், ஆரோன் ஹார்டி 86 ஓட்டங்களும், ஆர்கி ஷார்ட் 74 ஓட்டங்களும் விளாசினர்.

இந்த இன்னிங்சில் அவுஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி பெரிதும் போராடியது. குறிப்பாக 10 பேர் இந்திய அணித்தரப்பில் பந்துவீசினர். அணித்தலைவர் விராட் கோஹ்லியும் 7 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் பிருத்வி ஷா காயம் காரணமாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த முரளி விஜய் அதிரடியில் இறங்கினார்.

அணியின் ஸ்கோர் 109 ஆக இருந்தபோது லோகேஷ் ராகுல் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சிக்சர்களாக பறக்க விட்ட தமிழக வீரர் முரளி விஜய், அதிரடியாக சதம் அடித்தார்.

132 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்சர்கள் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 129 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டேனியல் ஃபாலின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அப்போது கடைசி நாள் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி 43.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுத்திருந்தது. விஹாரி 15 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதனால் இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers