அவுஸ்திரேலியா மண்ணில் கெத்து காட்டிய இந்திய அணி! முதல் முறையாக சாதனை வெற்றி படைத்த கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா அணி 235 ஓட்டங்களும் எடுத்தன.

இதனால் 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி 307 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

323 ஓட்டங்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து பெளலியன் திரும்பினர்.

நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31, ஹெட் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார்.

ஆனால் அவர் 60 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14 ஓட்டங்களிலும் அவுட் ஆனார்.

விக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வந்த அவுஸ்திரேலியா அணிக்கு கடைசி கட்டத்தில் மிட்சல் ஸ்டார்க், நாதன் லயன் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து இந்திய அணியின் வெற்றியை தள்ளிப்போட்டனர்.

இருப்பினும் ஸ்டார்க் 28 ஓட்டங்களிலும், ஜோஸ் ஹசல்வுட் 13 ஓட்டங்களிலும் அவுட்டாக இறுதியாக அவுஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ஓட்டங்கள் எடுத்து 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அவுஸ்திரேலியா மண்ணில் இந்தியா முதல் முறையாக தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு தொடர்களில் ஆசிய கேப்டன்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை.

தற்போது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அந்த மூன்று நாடுகளிலும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்