10 ஓவர்களில் 130 ஓட்டங்கள்..! வங்கதேசத்தை புரட்டியெடுத்த வெஸ்ட் இண்டீஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

சில்ஹெட்டில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், லிதான் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவருமே சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

அதன் பின்னர் வீரர்களும் வெஸ்ட் இண்டிஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் வங்கதேச அணி 19 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷெல்டன் காட்ரெல் 4 விக்கெட்டுகளும், கீமோ பவுல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர்கள் அதிரடியில் மிரட்டினர். லீவிஸ் 11 பந்துகளில் 18 ஓட்டங்களில் அவுட் ஆக, ஷாய் ஹோப் வங்கதேசத்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

சிக்சர்களாக பறக்கவிட்ட அவர், 23 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் 23 ஓட்டங்களும், கீமோ பவுல் 28 ஓட்டங்களும் அதிரடியாக எடுக்க அந்த அணி 10.5 ஓவர்களிலேயே 130 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்