எங்கள் கணிப்பை இந்திய அணி பொய்யாக்கியது.. அவர்கள் இல்லாததை உணர்கிறோம்: புலம்பும் டிம் பெய்ன்

Report Print Kabilan in கிரிக்கெட்

டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம், ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது தங்களது கணிப்பை இந்திய அணியினர் பொய்யாக்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவின் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இந்த 3 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் தயாராக கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. குறிப்பாக ஹாரிஸ், ஹெட் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அதே நேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்மித், வார்னர் இல்லாத நிலையை நாங்கள் உணர்கிறோம். இந்தத் தொடர் தொடங்கும் முன் இந்திய அணியைத் தோற்கடித்து விடுவோம் என்று கணித்தோம்.

ஆனால், இந்தத் தொடரில் விராட் கோஹ்லி அடித்த ஓட்டங்கள், புஜாராவின் சதம், பும்ராவின் வேகப்பந்துவீச்சு அனைத்தும் கணிப்பை பொய்யாக்கியது. அதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது. எங்கள் அணியில் ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை என்பது வருத்தம்தான்.

ஒரு சில வீரர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், டாப் 7 துடுப்பாட்ட வீரர்களும் சரியாக விளையாடவில்லை என்றே கூற முடியும். அதே நேரத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டது ஆறுதல் அளிக்கிறது. அடுத்துவரும் இலங்கை தொடருக்கு ஊக்கமாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்