மீண்டும் பினிஷர் என்பதை நிரூபித்த டோனி! கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து இந்தியா அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி மற்றும் கோஹ்லியின் அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று வித போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணியும், டி20 தொடர் சமநிலையில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன் படி அவுஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் வந்த வேகத்தில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் பெளலியன் திரும்பினார்.

அலெக்ஸ் கேரி (18), கவாஜா( 21), ஹேன்ட்ஸ் கோம்ப் (20) என அடுத்தடுத்து வெளியேறினர்.

இருப்பினும் தனி ஒருவனாக ஷான் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், அவுஸ்திரேலிய அணியின் எண்ணிக்கை சீரான வேகத்தில் எகிறியது.

அபாரமாக செயல்பட்ட மார்ஷ் ஒருநாள் தொடரில் 7-வது சதம் எட்டினார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளிக்க அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

6-வது விக்கெட்டுக்கு 94 ஓட்டங்கள் சேர்த்தபோது புவனேஷ்வர் குமார் பந்தில் மேக்ஸ்வெல் 48 பெளலியன் திரும்பினார்.

அதன் பின் சதமடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷான் மார்ஷ் 131 ஓட்டங்களில் அவுட்டானார். ரிச்சர்ட்சன் (2) சிடில் (0) சொதப்ப அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 43 ஓட்டங்களிலும், ஷிகர் தவான் 32 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.அம்பதி ராயுடு 24 ஓட்டங்களிலும் வெளியேறினார்.

விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் கேப்டன் கோஹ்லி-டோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டோனி ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்த கோஹ்லி, வழக்கம் போல் தன்னுடைய அதிரடிய ஆட்டத்தை காட்டினார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 24வது சதமடித்து அசத்தினார்.

இவர் 108 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, டோனி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்.

முதலில் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் 6 பந்துக்கு 7 ஓட்டங்கள் என்ற போது, முதல் பந்திலே சிக்ஸர் அடித்து மீண்டும் நான் ஒரு நல்ல பினிஷர் என்பதை நிரூபித்தார்.

அதன் பின் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டு இந்திய அணி 49.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளுக்கு 55 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 14 பந்துக்கு 25 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்