92 ரன்களில் சுருண்ட இந்தியா! நியூசிலாந்து அணி அபார வெற்றி

Report Print Raju Raju in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, இன்று ஹாமில்டனில் நடக்கிறது. இப்போட்டியில் டோனி, கோஹ்லி ஆகியோர் விளையாடவில்லை.

இதில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் ஷிகர் தவான்13 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடுவும் டக் அவுட்டில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியா 30.5 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணியில் அதிகபட்சமாக சகால் 18 ஓட்டங்கள் எடுத்தார்.

நியூசிலாந்து சார்பில் பவுல்ட் 5 விக்கெட்களையும், கிராண்டோம் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்

இதையடுத்து 93 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக மார்டின் கப்டில் மற்றும் நிகோல்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி ரன் கணக்கை தொடங்கிய மார்டின் கப்டில், அடுத்த இரண்டு பந்துகளிலும் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.

முதல் மூன்று பந்துகளிலேயே 14 ரன்கள் எடுத்ததை அடுத்து அதிரடியை தொடர நினைத்த கப்டிலை நான்காவது பந்திலேயே புவனேஷ்வர் குமார் வீழ்த்திவிட்டார்.

கப்டிலின் விக்கெட்டை அடுத்து நிகோல்ஸுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கப்டிலுக்கு பிறகு நிகோல்ஸ் அதிரடியை தொடர்ந்தார்.

கேப்டன் வில்லியம்சனை 11 ரன்களில் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். இதையடுத்து நிகோல்ஸுடன் ஜோடி சேர்ந்த ரோஸ் டெய்லர், சாஹலின் பவுலிங்கில் சில சிக்ஸர்களை பறக்கவிட்டு 15வது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார்.

வில்லியம்சனின் விக்கெட்டுக்கு பிறகு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்ட நிகோல்ஸ் - டெய்லர் ஜோடி, 15வது ஓவரில் இலக்கை எட்டியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers