இந்திய அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைப்போம்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சவால்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் வரலாறு படைப்போம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 6 உலகக் கிண்ண தொடர்களில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை வீழ்த்தியதே இல்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் தொடங்கும் உலகக் கிண்ண தொடரில் ஜூன் 16ஆம் திகதி ஓல்டு டிராபோர்டு நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

அந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைப்போம் என பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘உலகக் கிண்ண போட்டிகளில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதில்லை என்ற அவப்பெயர் எங்களுக்கு இருந்து வருகிறது. அந்த துரதிர்ஷ்டத்தை இந்த முறை நாங்கள் தகர்ப்போம்.

இந்திய அணியை உலகக் கிண்ண தொடரில் வீழ்த்தி புதிய வரலாறு படைப்போம். அந்த அளவுக்கு நம்பிக்கையான, திறமையான வீரர்கள் தற்போது பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள். இந்த முறை இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

இதை நான் எவ்வாறு சொல்கிறேன் என்றால், கடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை எங்கள் வீரர்கள் வீழ்த்தி இருந்தார்கள். இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் காலநிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

எங்களிடம் திறமையான பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இந்தியாவை வீழ்த்த முடியும் என நம்புகிறேன். இந்தியாவை வீழ்த்தப் போகும் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக பக்கபலமாக நான் இருப்பது பெருமையாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Francois Nel/Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers