சாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கு காரணமாக இருந்த குசல் பெரேராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 13 ஆம் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில், தென்னாப்பிரிக்கா 235 ரன்களும், இலங்கை 191 ரன்களும் எடுத்தன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 304 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

2 வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. மிடில் ஆர்டரில் இறங்கிய குசல் பெரேரா மட்டும் நின்று ஆடிக்கொண்டிருந்தார். 69.4 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 226 ரன்னுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதனால் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி உறுதியாகி இருந்தது.

ஆனால் குசல் பெரேரா ஆக்ரோஷ ஆட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக பந்துவீச்சாளர் விஷ்வா பெர்ண்டான்டோ தடுப்பாட்டம் ஆடி, உதவினார். ஸ்டெயின், ரபடா ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்ட குசல் பெரேரா, யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசியில் பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இலங்கை அணி 85.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குசல் பெரேரா 153 ரன் எடுத்தார்.

வெற்றிக்கு பின் பேசிய பெரேரா, நான் என்னை நம்பினேன். என் பங்கை சரியாக செய்தேன். அணியாக தான் வெற்றி பெற்றோம்.

இது எனக்கு ஸ்பெஷலான இன்னிங்ஸ். கடுமையாக பயிற்சி மேற்கொண்டதற்கான பலன் இது என கூறியுள்ளார்.

இந்நிலையில் பெரேராவுக்கு இலங்கை ஜாம்பவான்கள் சங்ககாரா, ஜெயவர்தனே, அர்னால்டு உட்பட பல வீரர்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்