வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கப்திலின் அபார சதத்தினால், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி 49.4 ஓவரில் 226 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முகமது மிதுன் 69 பந்துகளில் 57 ஓட்டங்களும், சபீர் ரஹ்மான் 65 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், ஆஸ்லே, நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் நிக்கோலஸ் 14 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதனைத் தொடந்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் கப்தில் மற்றும் வில்லியம்சன் இருவரும் அபாரமாக விளையாடி இலக்கை நோக்கி பயணித்தனர்.
அதிரடியில் மிரட்டிய கப்தில் ஒருநாள் போட்டிகளில் தனது 16வது சதத்தை பதிவு செய்தார். அதன் பின்னர் 88 பந்துகளில் 4 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.

எனினும், வில்லியம்சன்-டெய்லரின் ஆட்டத்தினால் நியூசிலாந்து அணி 36.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 65 ஓட்டங்களும், டெய்லர் 21 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 20ஆம் திகதி நடைபெற உள்ளது.