இரண்டாவது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்காவை சுழன்று அடித்த இலங்கை! புதிய வரலாறு படைக்க வாய்ப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

போர்ட் எலிசபெத் டெஸ்டின் 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 128 ஓட்டங்களில் சுருண்டதால், இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 197 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 222 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 86 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய இலங்கை அணி ரபடா, ஒலிவியரின் பந்துவீச்சினால் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டிக்வெல்ல 42 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 68 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கியது.

இலங்கையின் சுரங்கா லக்மல் மற்றும் தனஞ்செய டி சில்வா ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. மார்க்ராம் 18 ஓட்டங்களிலும், ஆம்லா 32 ஓட்டங்களிலும் அவுட் ஆன நிலையில் கேப்டன் பாப் டூ பிளிசிஸ் களமிறங்கினார்.

நங்கூரம் போல் நின்று விளையாடிய அவர், அணியை மீட்க போராடினார். ஆனால், மறுபுறம் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 44.3 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த தென் ஆப்பிரிக்க அணி 128 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பாப் டூ பிளிசிஸ் 50 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளையும், டி சில்வா 3 விக்கெட்டுகளையும், ரஜிதா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்க அணி ஆல்-அவுட் ஆனதால் இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deryck Foster/BackpagePix

Ashley Vlotman/Gallo Images/Getty Images

அதனைத் தொடர்ந்து இலங்கை அணி களமிறங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஒஷாடா பெர்னாண்டோ 17 ஓட்டங்களுடனும், குசால் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றால், தென் ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்யும். அவ்வாறு வெற்றி பெற்றால், தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையைப் படைக்கும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்