39 வயதில் புதிய சாதனை படைக்கப் போகும் கிறிஸ் கெய்ல்!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டவுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பார்படாசில் நேற்று நடந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் குவித்தது. ஹெட்மையர் 104 ஓட்டங்களும், கிறிஸ் கெய்ல் 50 ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் 263 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 79 ஓட்டங்களும், இயான் மோர்கன் 70 ஓட்டங்களும் எடுத்தனர். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் அடித்த அரைசதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 9912 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இன்னும் 88 ஓட்டங்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த 2வது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையை கெய்ல் படைப்பார்.

இந்த தொடருடன் கிறிஸ் கெய்ல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படும் நிலையில், எஞ்சிய இரண்டு போட்டிகளில் அவர் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கேப்டன் பிரையன் லாரா மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணியில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்