மலிங்காவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா! 331 ஓட்டங்கள் குவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

டர்பனில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், டி காக்கின் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டர்பனில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் அதிரடியில் மிரட்டினார். ஹென்ரிக்ஸ் 4 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த பாப் டூ பிளீசிஸ் அதிரடியாக 27 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து மலிங்கா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் டி காக்-ரஸி வான் டர் டுசன் கை கோர்த்தனர். இவர்களது அபார ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பவுண்டரிகளை விரட்டிய குவிண்டன் டி காக் ஒருநாள் போட்டிகளில் தனது 14வது சதத்தை பதிவு செய்தார்.

Gallo Images

108 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 121 எடுத்து டி காக் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 231 ஆக உயர்ந்தபோது, அரைசதம் அடித்த வான் டர் டுசன் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். எனினும் பின்னர் வந்த வீரர்களும் இலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் மில்லர் 41(46) ஓட்டங்களுடனும், பிலுக்வாயோ 38(15) ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை கேப்டன் மலிங்காவின் பந்துவீச்சு இப்போட்டியில் சுத்தமாக எடுபடவில்லை. 10 ஓவர்கள் வீசிய அவர் 68 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். உதானா 2 விக்கெட்டுகளும், மெண்டிஸ் மற்றும் ரஜிதா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers