இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவுஸ்திரேலிய அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான 4 வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் ரோகித்சர்மா (95), ஷிகர்தவான் (143) பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை குவிந்திருந்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜெய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல், புவனேஷ்வர்குமார் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா அணிக்கு வலுசேர்க்கும் விதமாக 91 ரன்களை குவித்தார். அதேபோல மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் 117 ரன்களும் எடுத்து அணியை வலுவான நிலைக்கு எடுத்து சென்றனர்.

அதன்பிறகு களமிறங்கிய ஆஸ்டன் டார்னர் 43 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் ஐந்து பவுண்டரி என அதிரடியாக விளையாடி 84 ரன்கள் எடுத்து, 47.5 ஓவரில் ஆட்டத்தினை முடித்து வைத்தார்.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்