ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி! பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ஐசிசி விளக்கம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி அனுமதி வாங்கியே ராணுவ தொப்பியை அணிந்தது என்று ஐ.சி.சி விளக்க அளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது.

மேலும், அந்தப் போட்டிக்கான சம்பளத்தை புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்தது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம் கிரிக்கெட் வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அத்துடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி, ‘இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணிக்குரிய தொப்பியை தவிர்த்து, ராணுவ தொப்பியை அணிந்து விளையாடியதை உலகமே பார்த்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதை பார்க்கவில்லையா? இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐ.சி.சி-யின் பொறுப்பு’ என தெரிவித்திருந்தார்.

மேலும், பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, ‘இது வெறும் கிரிக்கெட் அல்ல. ஜென்டில்மேன் விளையாட்டில் அரசியல் கலக்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு ஐ.சி.சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

‘ராணுவ தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே ஐ.சி.சி-யிடம் ஆலோசனை நடத்தியது. இது விதிமீறல் அல்ல என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த சிறப்பு தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்தனர். இது நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்