ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பக்கூடாது! பாகிஸ்தான் தொலைக்காட்சிகளுக்கு தடை

Report Print Kabilan in கிரிக்கெட்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

12வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

உலக நாடுகள் முழுவதும் இந்த போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாத் அஹமத் சவுத்ரி கூறுகையில், ‘பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் எங்கள் அணி வீரர்கள் விளையாடிய போட்டிகளை ஒளிபரப்ப இந்தியாவை சேர்ந்த பிரபல ஒளிபரப்பு நிறுவனம் மறுத்துவிட்டது.

இதை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்க முடியாது என்பதால், ஐ.பி.எல் போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம். அரசியலையும், விளையாட்டையும் தனித்தனியாக பார்க்கவே பாகிஸ்தான் விரும்புகிறது.

ஆனால், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது, இந்திய ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலினால் இந்தியாவில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டபோது, பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை ஒளிபரப்பும் இந்திய உரிமத்தை பெற்றிருந்த டிஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, அந்த தொடரின் ஒளிபரப்பை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்