கடைசி டி20யிலும் தோல்வி! ஒயிட் வாஷ் ஆன இலங்கை அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி போட்டியிலும் தோல்வியடைந்ததால், இலங்கை அணி டி20 தொடரை முழுவதுமாக இழந்தது.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே முதல் இரண்டு டி20யிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி டி20 போட்டி ஜோகன்னெஸ்பெர்க்கில் நேற்று நடந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. மார்க்கிராம் 15 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ஹென்ரிக்ஸ்-பிரிடோரியஸ் ஜோடி அதிரடியில் மிரட்டியது.

அரைசதம் கடந்த ஹென்ரிக்ஸ் 52 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினியும் சிக்சர்களாக விளாசினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் குவித்தது.

Getty Images

பிரிடோரியஸ் 42 பந்துகளில் 77 ஓட்டங்களும், டுமினி 14 பந்துகளில் 34 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா அதிரடியாக 22 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.

Getty Images

ஆனால் அவருக்கு பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இலங்கை அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்த நிலையில், கடந்த போட்டியில் 84 ஓட்டங்கள் விளாசிய உதானா மட்டும் 23 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 36 ஓட்டங்கள் விளாசினார்.

ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆனதால், 15.4 ஓவரில் இலங்கை அணி 137 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணி தரப்பில் பிலுக்வாயோ 4 விக்கெட்டுகளையும், ஜூனியர் டாலா மற்றும் சிபம்லா இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

முன்னதாக ஒருநாள் தொடரை இழந்திருந்த இலங்கை அணி, தற்போது டி20 தொடரையும் இழந்துள்ளது. ஆனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மட்டும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers