எந்த வரிசையிலும் களமிறங்கி நொறுக்க தயார்! டோனியின் சாதனையை முறியடித்த ரிஷாப் பண்ட்

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்து நொறுக்கிய ரிஷாப் பண்ட், எந்த வரிசையிலும் களமிறங்கி அடித்து நொறுக்க தயார் என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்-யின் நேற்று நடந்த லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி வீரர் ரிஷாப் பண்ட் 27 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார்.

அவர் 18 பந்துகளிலேயே அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களில் பண்ட் 3வது இடம்பெற்றார். அத்துடன் 20 பந்துகளில் அரைசதம் அடித்த டோனியின் சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘நான் அணியில் எந்த வரிசையிலும் களமிறங்க நிர்வாகம் விருப்பப்படுகிறதோ, அந்த வரிசையில் களமிறங்கி அடித்து நொறுக்கத் தயாராக இருக்கிறேன்.

எனக்கு இது மிகப்பெரிய பயணமாக அமைந்திருக்கிறது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு வருகிறேன். நாம் அடித்து ஆடும்போது நம்முடைய அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை சூழலுக்கு ஏற்றார்போல் தான் விளையாடுகிறேன்.

இந்தப் போட்டியில் அணியின் ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய தேவை இருந்தது. அதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டேன். டி20 போட்டித் தொடரில் நாம் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும். பந்துவீச்சாளர்கள் தனக்கென அடையாளத்தை உருவாக்க விரும்பினால், நாம் பதிலுக்கு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்